ஹெலிகாப்டர் பெற்றோரா நீங்கள்..? கொஞ்சம் கவனமா இருங்க..!

எப்போதும் பெற்றோரின் தீவிர கண்காணிப்பு உள்ள சூழ்நிலையில் வளரும் குழந்தைகளால் பிரச்சினைகளில் இருந்து மீண்டு எழ முடியாமல் போய்விடும்.

Update: 2024-08-11 13:10 GMT

குழந்தைகள் மீது பெற்றோருக்கு எப்போதும் அக்கறை இருப்பது இயல்பு. அதுவே, அளவுக்கு மீறி, ஒருவித பயத்துடனேயே குழந்தைகளை பொத்திப் பொத்தி வளர்க்கும் வளர்க்கும் பெற்றோர் 'ஹெலிகாப்டர் பெற்றோர்' என்று அழைக்கப்படுகிறார்கள்.

அவர்கள் குழந்தையின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள நினைக்கிறார்கள். குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவர்கள் வீட்டை விட்டு கல்வி நிறுவனங்கள் உள்பட எங்கு சென்றாலும் அதிக கவனம் செலுத்துவது, அவர்களின் செயல்களை கண்காணிப்பது என ஹெலிகாப்டர்களைப் போல வட்டமிட்டுக்கொண்டே இருப்பார்கள்.

பொதுவாக, குழந்தையை வளர்ப்பது முதல் அவர்களை பாதுகாப்பது வரை, பெற்றோர் கட்டாயம் ஒரு சமநிலையை கடைப்பிடிக்க வேண்டும். இது பெற்றோருக்கு சவாலான ஒன்றுதான். குழந்தைகளை பெற்றோர் அதிகம் பாதுகாத்தால், அவர்களுக்கு அது பாதிப்பையே ஏற்படுத்தும். அவர்களின் வளர்ச்சி, சுதந்திரத்தை பாதிக்கும். குழந்தைகளையும், அவர்களின் செயல்பாடுகளையும் தொடர்ந்து கண்காணித்து வந்தால், அவர்களுக்கு எந்த சுதந்திரமும் கொடுக்காமல், அவர்களை வளரவிடாமல் பெற்றோரே தடுக்கிறார்கள் என்றே பொருள்.

ஹெலிகாப்டர் பெற்றோரைப் பொருத்தவரை அவர்களே குழந்தைகளுக்கான முடிவுகளையும் எடுக்கிறார்கள். சிறிய முடிவுகள் எடுப்பதற்கு கூட குழந்தைகளை அனுமதிக்கவில்லை என்றால், அவர்களை அளவுக்கு மீறி பாதுகாக்கிறார்கள் என்று பொருள். குழந்தையின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து அதிகம் கவலை கொண்டால் அவர்களைச் சுற்றி ஒரு குறுகிய வட்டத்தை வரைகிறார்கள்.

குழந்தைகள் எவ்வித சவால்களையும் எதிர்கொள்ள பெற்றோர் அனுமதிக்கவில்லை என்றால், குழந்தைகளின் பிரச்சினைகளை தீர்க்கும் திறன் வளர்வதை அவர்களே தடுக்கிறார்கள் என்று பொருள். இந்த சூழ்நிலையில் வளரும் குழந்தைகளால் பிரச்சினைகளில் இருந்து மீண்டு எழ முடியாமல் போய்விடும். குழந்தைகளின் மனச்சோர்வு மற்றும் பயத்தின் அளவை அதிகரிக்கச்செய்யும்.

ஆகவே, பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் முடிவெடுக்கும் தைரியத்தை வழங்கவேண்டும். தாங்களாகவே எதையும் செய்ய விடவேண்டும். நண்பர்களுடனான சண்டையில் தலையிடுவதை தவிர்க்கவேண்டும். நட்பு அல்லது சண்டை எதுவாக இருந்தாலும், அவர்களே தாமாக பிரச்சினைகளை சரிசெய்ய அனுமதிக்கவேண்டும். முடியாதபட்சத்தில் அமைதியாக எடுத்துரைத்து பிரச்சினைகளை தீர்க்கலாம். குழந்தைகள் தோல்விகளைச் சந்திக்க நேர்ந்தால் அதற்கு அதிகப்படியாக எதிர்வினையாற்றுவது, அவர்களை தோல்விகள் மற்றும் அது கற்றுத்தரும் பாடங்களில் இருந்து கற்பதை தடுக்கிறது. அவர்களின் தன்னம்பிக்கையையும் குலைக்கிறது.

எனவே, அதிகம் பாதுகாக்கும் ஹெலிகாப்டர் பெற்றோராக இருப்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெற்றோருக்கும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். அதேசமயம், கட்டுப்பாடற்ற சுதந்திரம் தரும் பெற்றோராகவும் இருப்பது நல்லதல்ல. இரண்டையும் சம அளவு கொடுத்து, குழந்தைகள் வளர வழிகாட்டுவதே சிறந்தது.

சில குழந்தைகள் இயல்பாகவே கூச்ச சுபாவம், பயந்த சுபாவம் கொண்ட குழந்தைகளாக இருக்கும். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு முதலில் ஆறுதலாகவும், அரவணைப்பாகவும் இருக்க வேண்டியது பெற்றோர்தான். பிறரிடம் எப்படி பழகவேண்டும்? யாராவது திடீரென வீட்டுக்கு வந்தால் எப்படி பேசவேண்டும்? என்பதை குழந்தைகளுக்கு புரியும்படி அன்பாக எடுத்து கூறவேண்டும். குறிப்பாக உறவினர்களின் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று அங்குள்ள குழந்தைகளுடன் இணைந்து கலந்துரையாட, விளையாட செய்யலாம். இவ்வாறு செய்வதால் குழந்தையின் பயம் விலகுவதுடன், உறவுகளும் வலுப்பெறும்.

குறிப்பாக, கூச்ச சுபாவம் உள்ள குழந்தையின் மனதைப் புரிந்துகொண்டு உலகில் வாழ்வதற்கு ஏற்ற வழிமுறைகளை அவர்களுக்கு விளக்கமாக எடுத்துச் சொல்லவேண்டியதும் அவசியம்.  

Tags:    

மேலும் செய்திகள்