மத்தியில் அமைகிறது பா.ஜ.க. கூட்டணி ஆட்சி

Update:2024-06-04 00:38 IST
Live Updates - Page 5
2024-06-04 02:22 GMT


சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ள நிலையில், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் காரைக்குடியில் உள்ள காளி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

2024-06-04 01:37 GMT



2024-06-04 01:12 GMT

வாக்கு எண்ணிக்கையை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. வாக்கு எண்ணும் மையத்திற்குள் ஊழியர்களை அனுமதிக்கும் பணி தொடங்கியுள்ளது. வாக்குச்சாவடி மையத்திற்குள் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதி கிடையாது. 

2024-06-03 23:53 GMT

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு எதிர்க்கட்சிகளை எதிர்கொள்வதற்கான வியூகம் - பா.ஜனதா மேலிட தலைவர்கள் பங்கேற்பு

நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பா.ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், கருத்து கணிப்பு முடிவுகளை ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் நிராகரித்துள்ளனர். இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடந்த நாளில், அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

நேற்று முன்தினம் தேர்தல் கமிஷன் அதிகாரிகளை ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் சந்தித்து மனு கொடுத்தனர். முதலில், தபால் வாக்குகளை எண்ணி அறிவிக்க வேண்டும் என்றும், ஓட்டு எண்ணிக்கைக்கான வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அதுபோல், பா.ஜனதா குழுவும் தேர்தல் கமிஷனை சந்தித்தது. தேர்தல் முறையை சிறுமைப்படுத்த ‘இந்தியா’ கூட்டணி முயற்சிப்பதாக குற்றம் சாட்டியது.

இந்நிலையில், பா.ஜனதா மேலிட தலைவர்கள் நேற்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.

ஓட்டு எண்ணிக்கைக்கு முந்தைய நாளில் நடந்ததால், இது முக்கியத்துவம் பெற்றுள்ளது. பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனை விவரம் குறித்து பா.ஜனதா தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், கருத்து கணிப்புக்கு பிந்தைய அரசியல் நிலவரம் குறித்தும், ‘இந்தியா’ கூட்டணியின் தொடர் சந்திப்புகள் குறித்தும் விவாதித்ததாக தெரிகிறது.

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு எதிர்க்கட்சிகளை எதிர்கொள்வதற்கான வியூகம் பற்றியும் அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

2024-06-03 23:46 GMT

நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ள நட்சத்திர தொகுதிகள் : பிரபலங்களுக்கு களம் வசப்படுமா?

நாடாளுமன்ற தேர்தலில் கட்சி தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர்-நடிகைகள் என பல்வேறு பிரபலங்கள் களமிறங்கி இருக்கும் தொகுதிகள் நாடு முழுவதும் கவனம் பெற்று இருக்கின்றன.

7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன.

மொத்தமுள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத்தில் பா.ஜனதா வேட்பாளர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். மீதமுள்ள 542 இடங்களின் முடிவுகள் இன்று வெளியாகின்றன.

இந்த அனைத்து தொகுதிகளின் முடிவும் மக்களிடம் ஆவலை ஏற்படுத்தி இருந்தாலும், பல்வேறு பிரபலங்கள் போட்டியிடும் தொகுதிகள் கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.

குறிப்பாக கட்சிகளின் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர்-நடிகைகள் என பிரபலங்கள் போட்டியிடும் தொகுதிகள் நட்சத்திர அந்தஸ்தை பெற்று உள்ளன.

வாரணாசி, ரேபரேலி

இதில் மிகவும் முக்கியமான தொகுதி உத்தரபிரதேசத்தின் வாரணாசி. இந்த தொகுதியில் பிரதமர் மோடி 3-வது முறையாக பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து காங்கிரசின் அஜய் ராய், இந்தியா கூட்டணி வேட்பாளராக களமிறங்கி இருக்கிறார். இவரும் வாரணாசியில் போட்டியிடுவது இது 3-வது முறையாகும்.

புனித பூமியான வாரணாசி, பிரதமர் மோடிக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுக்குமா?

இந்த மாநிலத்தின் ரேபரேலி தொகுதியும் எப்போதும் போல இந்த முறையும் அகில இந்திய அளவில் கவனம் பெற்று இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியும், பா.ஜனதாவின் தினேஷ் பிரதாப் சிங்கும் நேருக்கு நேர் மோதுகின்றனர்.

உத்தரபிரதேசத்தின் அமேதியில் 3 முறை வெற்றி பெற்ற ராகுல் காந்தி கடந்த முறை ஸ்மிரிதி இரானியிடம் வெற்றியை பறிகொடுத்திருந்தார்.

இந்த தேர்தலில் தாய் சோனியாவின் ரேபரேலி தொகுதிக்கு மாறியிருக்கும் அவருக்கு நேரு-காந்தி குடும்பத்தின் இந்த பாரம்பரிய தொகுதி ‘கை’ கொடுக்குமா?

ஸ்மிரிதி இரானியின் அமேதி

ராகுல் காந்தி போட்டியிடுவதால் நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருக்கும் மற்றொரு தொகுதி, வயநாடு. கேரளாவில் உள்ள இந்த தொகுதி கடந்த முறையும் ராகுல் காந்திக்கு பெரும் வெற்றியை கொடுத்திருந்தது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஆனி ராஜாவை எதிர்த்து இந்த முறை களம் இறங்கி இருக்கும் ராகுல் காந்தி, தென் இந்தியாவில் தனது இருப்பை உறுதி செய்வாரா?

உத்தரபிரதேசத்தில் நேரு-காந்தி குடும்பத்தின் மற்றொரு பாரம்பரிய தொகுதியான அமேதி, இந்த முறையும் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இங்கு கடந்த தேர்தலில் ராகுல் காந்திக்கு அதிர்ச்சி அளித்த ஸ்மிரிதி இரானியே மீண்டும் களமிறங்கி இருக்கிறார்.

அவரை எதிர்த்து சோனியா குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான கிஷோரி லால் சர்மாவை காங்கிரஸ் களம் இறக்கி இருக்கிறது. அந்த வகையில் நேரு-காந்தி குடும்பத்தை சாராத ஒருவர் கடந்த 25 ஆண்டுகளில் முதல் முறையாக களம் இறங்கி இருக்கிறார்.

காங்கிரசின் முதல் குடும்ப உறுப்பினரையே தோற்கடித்த ஸ்மிரிதி இரானிக்கு இந்த முறை வெற்றி மேலும் எளிதாகுமா?

யூசுப் பதானுக்கு வெற்றி கிடைக்குமா?

காங்கிரசின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சசிதரூரும் பா.ஜனதாவின் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகரும் மோதும் திருவனந்தபுரம் தொகுதியும் நட்சத்திர அந்தஸ்தை கொண்டது.

இந்த 2 பெருந்தலைகளுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ரவீந்திரனும் மல்லுக்கட்டுகிறார். இவர் திருவனந்தபுரம் சட்டசபை தொகுதியில் 2005-ம் ஆண்டு எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார்.

இந்த மும்முனை போட்டியில் முதலிடம் பெறுவது யார்?

இந்த பட்டியலில் அடுத்த இடத்தில் மேற்கு வங்காளத்தின் பெராம்பூர் தொகுதி இருக்கிறது. அதிரடி பேச்சுகளால் கவனம் ஈர்க்கும் காங்கிரசின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த யூசுப் பதானும் களமாடுகிறார்கள்.

மக்களவை காங்கிரஸ் தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, இந்த தொகுதியில் கடந்த 1999-ம் ஆண்டு முதல் 5 முறை எம்.பி.யாக இருக்கிறார். இந்த அனுபவ தலைவரின் 6-வது வெற்றிக்கு, புதுமுகம் யூசுப் பதானின் அதிரடி தடைபோடுமா?

சுஷ்மா சுவராஜ் மகள்

முன்னாள் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி சுவராஜ் போட்டியிடும் புதுடெல்லி தொகுதி தலைநகரையும் கடந்து எதிர்பார்ப்பு மிகுந்த தொகுதியாக மாறியிருக்கிறது.

மத்திய மந்திரி மீனாட்சி லெகி வெற்றி பெற்ற இந்த தொகுதியில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சோம்நாத் பாரதியை எதிர்கொள்ளும் பன்சூரி, பா.ஜனதாவின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா?

சத்தீஷ்காரில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆட்சியை பறிகொடுத்த முதல்-மந்திரி பூபேஷ் பாகேல், நாடாளுமன்ற தேர்தலில் ராஜ்நந்த்கான் தொகுதியில் களம் இறங்கி இருப்பதால் அந்த தொகுதியும் நட்சத்திர தொகுதியாக மாறி இருக்கிறது.

கடந்த 2009-ம் ஆண்டு முதல் பா.ஜனதாவின் கோட்டையாக விளங்கும் இந்த தொகுதியில் தற்போதைய எம்.பி. சந்தோஷ் பாண்டேவை எதிர்கொண்டுள்ளார். தொகுதியில் பா.ஜனதாவின் வெற்றி வரலாற்றை முடிவுக்கு கொண்டு வர முடியுமா?

கங்கனா ரணாவத்

இந்த தொகுதிகளை தவிர மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி கமல்நாத்தின் மகன் நகுல்நாத் போட்டியிடும் சிந்த்வாரா, கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா போட்டியிடும் சிவமோகா, நடிகை கங்கனா ரணாவத் போட்டியிடும் இமாசல பிரதேசத்தின் மண்டி உள்பட ஏராளமான நட்சத்திர தொகுதிகள் உள்ளன.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த தொகுதிகள் பிரபலங்களுக்கு கைகொடுத்துள்ளதா என்பது இன்று பிற்பகலுக்குள் தெரிந்து விடும்.

2024-06-03 22:56 GMT

தேர்தல் கமிஷனின் வழிகாட்டுதல்படி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் - சத்யபிரத சாகு

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது:-

வாக்கு எண்ணிக்கைக்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. வாக்கு எண்ணிக்கைக்காக நியமிக்கப்பட்ட 58 பார்வையாளர்களும் வந்துவிட்டனர். இந்திய தேர்தல் கமிஷனின் வழிகாட்டுதல்படி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். சுற்று வாரியாக வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியிடப்படும்.

தபால் வாக்குகளை எண்ணும் பணி சரியாக காலை 8 மணிக்கு தொடங்கும். தபால் வாக்கு எண்ணிக்கை குறித்த விவரங்கள் அங்குள்ள அரசியல் கட்சி முகவர்களுக்கு அறிவிக்கப்படும். மேலும், அங்குள்ள கரும்பலகையில் எண்ணிக்கை விவரங்கள் எழுதி வைக்கப்படும். ஆனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள வாக்குகளும் அனைத்து சுற்றுகளிலும் எண்ணப்பட்ட பிறகு, அதனுடன் தபால் வாக்கு எண்ணிக்கை கூட்டப்பட்டு இறுதி முடிவு அறிவிக்கப்படும்.

தபால் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி ஒருவேளை 8.30 மணிக்கு முன்னரே முடிந்துவிட்டால், அது முடிந்த நேரத்தில் இருந்து மின்னணு வாக்கு எந்திரங்களில் உள்ள வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். தபால் வாக்கு எண்ணிக்கை முடியாமல் காலை 8.30 மணியை தாண்டிச்சென்றுவிட்டது என்றாலும், 8.30 மணிக்கு மின்னணு வாக்கு எந்திரங்களில் உள்ள வாக்குகளை எண்ணும் பணியும் தொடங்கப்பட்டுவிடும்.

வாக்கு எண்ணிக்கையின்போது ஏதாவது புகார்கள் வந்தால், அதைப் பெற தலைமைச் செயலகத்தில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு, தேர்தல் நடத்தும் அதிகாரியும், பார்வையாளரும் கையொப்பமிட்ட பிறகு அதிகாரப்பூர்வமாக எண்ணிக்கை அறிவிக்கப்படும்

வாக்கு எண்ணிக்கையின்போது ஏதாவது 5 ஒப்புகை சீட்டு எந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். அந்த எண்ணிக்கை அதன் தொடர்புடைய வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்கு எண்ணிக்கையுடன் சரிபார்க்கப்படும். வாக்குகள் மீண்டும் எண்ணப்பட வேண்டும் என்ற புகார் எழுந்தால், அதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி முடிவெடுப்பார்.

தற்போது நாடு முழுவதும் அமலில் உள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகள் வரும் 6-ந் தேதியுடன் முடிவுக்கு வரும். மறுவாக்கு எண்ணிக்கை தேவைப்படும் என்ற பட்சத்திற்காக 5 மற்றும் 6-ந் தேதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

2024-06-03 22:38 GMT

வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு


வாக்கு எண்ணிக்கைக்காக தமிழ்நாடு முழுவதும் 15 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் 1 லட்சம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வருபவர்கள் அனைவரும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர். அவர்கள் செல்போன் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் பணிக்காக வரும் அலுவலர்கள் இன்று காலை 6 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்து, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டசபை தொகுதிக்கான கட்டிடத்தில், அடையாள அட்டையுடன் ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் முடிவுகளை தேர்தல் கமிஷனின் அதிகாரபூர்வ இணையதளமான https://results.eci.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

2024-06-03 22:12 GMT

விளவங்கோடு இடைத்தேர்தல்


தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படுகிறது.

இதேபோல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

2024-06-03 21:36 GMT

சென்னையில் வாக்கு எண்ணிக்கை

சென்னை மாவட்டத்தில் தென் சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும், மத்திய சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியிலும், வடசென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் மயிலாப்பூரில் உள்ள ராணிமேரி கல்லூரியிலும் எண்ணப்படுகின்றன.

இதேபோல் திருவள்ளூர் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி பெருமாள்பட்டு ஸ்ரீராம வித்தியா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பதிவான வாக்குகள் குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரியிலும், காஞ்சீபுரம் தொகுதியில் பதிவான வாக்குகள் பொன்னேரிக்கரையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு என்ஜினீயரிங் கல்லூரியிலும் நடைபெறுகிறது. .

புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படுகின்றன.

2024-06-03 20:47 GMT

தமிழ்நாடு-புதுச்சேரி

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியையும் சேர்த்து 40 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 45 நாட்களாக பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டை பொறுத்தவரை 39 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று 39 மையங்களில் எண்ணப்படுகின்றன.

இந்த பணியில் 38 ஆயிரத்து 500 பேர் ஈடுபடுகிறார்கள். இதில் 4,500 பேர் நுண்பார்வையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாக்குகள் எண்ணும் பணி அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்