நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ள நட்சத்திர தொகுதிகள்... ... மத்தியில் அமைகிறது பா.ஜ.க. கூட்டணி ஆட்சி
நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ள நட்சத்திர தொகுதிகள் : பிரபலங்களுக்கு களம் வசப்படுமா?
நாடாளுமன்ற தேர்தலில் கட்சி தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர்-நடிகைகள் என பல்வேறு பிரபலங்கள் களமிறங்கி இருக்கும் தொகுதிகள் நாடு முழுவதும் கவனம் பெற்று இருக்கின்றன.
7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன.
மொத்தமுள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத்தில் பா.ஜனதா வேட்பாளர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். மீதமுள்ள 542 இடங்களின் முடிவுகள் இன்று வெளியாகின்றன.
இந்த அனைத்து தொகுதிகளின் முடிவும் மக்களிடம் ஆவலை ஏற்படுத்தி இருந்தாலும், பல்வேறு பிரபலங்கள் போட்டியிடும் தொகுதிகள் கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.
குறிப்பாக கட்சிகளின் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர்-நடிகைகள் என பிரபலங்கள் போட்டியிடும் தொகுதிகள் நட்சத்திர அந்தஸ்தை பெற்று உள்ளன.
வாரணாசி, ரேபரேலி
இதில் மிகவும் முக்கியமான தொகுதி உத்தரபிரதேசத்தின் வாரணாசி. இந்த தொகுதியில் பிரதமர் மோடி 3-வது முறையாக பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து காங்கிரசின் அஜய் ராய், இந்தியா கூட்டணி வேட்பாளராக களமிறங்கி இருக்கிறார். இவரும் வாரணாசியில் போட்டியிடுவது இது 3-வது முறையாகும்.
புனித பூமியான வாரணாசி, பிரதமர் மோடிக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுக்குமா?
இந்த மாநிலத்தின் ரேபரேலி தொகுதியும் எப்போதும் போல இந்த முறையும் அகில இந்திய அளவில் கவனம் பெற்று இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியும், பா.ஜனதாவின் தினேஷ் பிரதாப் சிங்கும் நேருக்கு நேர் மோதுகின்றனர்.
உத்தரபிரதேசத்தின் அமேதியில் 3 முறை வெற்றி பெற்ற ராகுல் காந்தி கடந்த முறை ஸ்மிரிதி இரானியிடம் வெற்றியை பறிகொடுத்திருந்தார்.
இந்த தேர்தலில் தாய் சோனியாவின் ரேபரேலி தொகுதிக்கு மாறியிருக்கும் அவருக்கு நேரு-காந்தி குடும்பத்தின் இந்த பாரம்பரிய தொகுதி ‘கை’ கொடுக்குமா?
ஸ்மிரிதி இரானியின் அமேதி
ராகுல் காந்தி போட்டியிடுவதால் நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருக்கும் மற்றொரு தொகுதி, வயநாடு. கேரளாவில் உள்ள இந்த தொகுதி கடந்த முறையும் ராகுல் காந்திக்கு பெரும் வெற்றியை கொடுத்திருந்தது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஆனி ராஜாவை எதிர்த்து இந்த முறை களம் இறங்கி இருக்கும் ராகுல் காந்தி, தென் இந்தியாவில் தனது இருப்பை உறுதி செய்வாரா?
உத்தரபிரதேசத்தில் நேரு-காந்தி குடும்பத்தின் மற்றொரு பாரம்பரிய தொகுதியான அமேதி, இந்த முறையும் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இங்கு கடந்த தேர்தலில் ராகுல் காந்திக்கு அதிர்ச்சி அளித்த ஸ்மிரிதி இரானியே மீண்டும் களமிறங்கி இருக்கிறார்.
அவரை எதிர்த்து சோனியா குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான கிஷோரி லால் சர்மாவை காங்கிரஸ் களம் இறக்கி இருக்கிறது. அந்த வகையில் நேரு-காந்தி குடும்பத்தை சாராத ஒருவர் கடந்த 25 ஆண்டுகளில் முதல் முறையாக களம் இறங்கி இருக்கிறார்.
காங்கிரசின் முதல் குடும்ப உறுப்பினரையே தோற்கடித்த ஸ்மிரிதி இரானிக்கு இந்த முறை வெற்றி மேலும் எளிதாகுமா?
யூசுப் பதானுக்கு வெற்றி கிடைக்குமா?
காங்கிரசின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சசிதரூரும் பா.ஜனதாவின் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகரும் மோதும் திருவனந்தபுரம் தொகுதியும் நட்சத்திர அந்தஸ்தை கொண்டது.
இந்த 2 பெருந்தலைகளுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ரவீந்திரனும் மல்லுக்கட்டுகிறார். இவர் திருவனந்தபுரம் சட்டசபை தொகுதியில் 2005-ம் ஆண்டு எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார்.
இந்த மும்முனை போட்டியில் முதலிடம் பெறுவது யார்?
இந்த பட்டியலில் அடுத்த இடத்தில் மேற்கு வங்காளத்தின் பெராம்பூர் தொகுதி இருக்கிறது. அதிரடி பேச்சுகளால் கவனம் ஈர்க்கும் காங்கிரசின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த யூசுப் பதானும் களமாடுகிறார்கள்.
மக்களவை காங்கிரஸ் தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, இந்த தொகுதியில் கடந்த 1999-ம் ஆண்டு முதல் 5 முறை எம்.பி.யாக இருக்கிறார். இந்த அனுபவ தலைவரின் 6-வது வெற்றிக்கு, புதுமுகம் யூசுப் பதானின் அதிரடி தடைபோடுமா?
சுஷ்மா சுவராஜ் மகள்
முன்னாள் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி சுவராஜ் போட்டியிடும் புதுடெல்லி தொகுதி தலைநகரையும் கடந்து எதிர்பார்ப்பு மிகுந்த தொகுதியாக மாறியிருக்கிறது.
மத்திய மந்திரி மீனாட்சி லெகி வெற்றி பெற்ற இந்த தொகுதியில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சோம்நாத் பாரதியை எதிர்கொள்ளும் பன்சூரி, பா.ஜனதாவின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா?
சத்தீஷ்காரில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆட்சியை பறிகொடுத்த முதல்-மந்திரி பூபேஷ் பாகேல், நாடாளுமன்ற தேர்தலில் ராஜ்நந்த்கான் தொகுதியில் களம் இறங்கி இருப்பதால் அந்த தொகுதியும் நட்சத்திர தொகுதியாக மாறி இருக்கிறது.
கடந்த 2009-ம் ஆண்டு முதல் பா.ஜனதாவின் கோட்டையாக விளங்கும் இந்த தொகுதியில் தற்போதைய எம்.பி. சந்தோஷ் பாண்டேவை எதிர்கொண்டுள்ளார். தொகுதியில் பா.ஜனதாவின் வெற்றி வரலாற்றை முடிவுக்கு கொண்டு வர முடியுமா?
கங்கனா ரணாவத்
இந்த தொகுதிகளை தவிர மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி கமல்நாத்தின் மகன் நகுல்நாத் போட்டியிடும் சிந்த்வாரா, கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா போட்டியிடும் சிவமோகா, நடிகை கங்கனா ரணாவத் போட்டியிடும் இமாசல பிரதேசத்தின் மண்டி உள்பட ஏராளமான நட்சத்திர தொகுதிகள் உள்ளன.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த தொகுதிகள் பிரபலங்களுக்கு கைகொடுத்துள்ளதா என்பது இன்று பிற்பகலுக்குள் தெரிந்து விடும்.