காவல்துறையின் 20 கேள்விகளுக்கு பதில் அளித்த அல்லு அர்ஜுன்
புஷ்பா-2 திரைப்பட வெளியீட்டின்போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணைக்காக, நடிகர் அல்லு அர்ஜுன் இன்று காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. காவல்துறை தரப்பில் கேட்கப்பட்ட 20 கேள்விகளுக்கு அல்லு அத்ஜுன் பதில் அளித்தார்.
காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் கர்நாடக மாநிலம் பெலகாவியில் 26-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் 2025-ம் ஆண்டுக்கான கட்சியின் செயல்திட்டம் பற்றி விவாதிக்கப்பட இருக்கிறது.
முகத்தில் சிறுநீர் கழித்து சித்ரவதை- சிறுவன் தற்கொலை
உத்தர பிரதேசத்தின் பஸ்தி மாவட்டத்தில் 17 வயது சிறுவனை 4 நபர்கள் சேர்ந்து சரமாரியாக தாக்கியதுடன், முகத்தில் சிறுநீர் கழித்து அவமானப்படுத்தி உள்ளனர். இதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளனர். சிறுவனின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அவமானம் தாங்காமல் அந்த சிறுவன் தற்கொலை செய்துகொண்டான்.
துருக்கியின் பாலிகேசிர் மாகாணத்தில் உள்ள வெடிமருந்து ஆலையில் ஏற்பட்ட விபத்தில், 12 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர். இது நாசவேலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், அதற்கான சாத்தியம் இல்லை என மாகாண கவர்னர் கூறியிருக்கிறார்.
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
விலைவாசி உயர்வால் மக்கள் அன்றாடம் போராடி வருவதாகவும் அன்றாட தேவைகளின் சிறு விஷயங்களில் கூட மக்கள் சமரசம் செய்து வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும் ஆனால் கும்பகர்ணன் போல் மத்திய அரசு தூங்குவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி திருந்த வேண்டும், இல்லை என்றால் திருத்தப்படுவார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் ஆணவ கொலைகள் அதிகமாக நடக்கின்றன. சாதி உணர்வுகள் அதிகம் இருக்கின்ற மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. அரை நூற்றாண்டு திராவிட ஆட்சியில் பெரியார் கொள்கைகள் கைவிடப்பட்டுள்ளன. தலித் மக்களுக்கு கொடுமைகளை இழைக்கும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு மாணவர்கள் பாத பூஜை செய்யக் கூடாது என அனைத்து தனியார் பள்ளிகளுக்கு புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் லீலாவதி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். பள்ளிகளில் பொதுத் தேர்வுக்கு முன் பாத பூஜை என்ற பெயரில் நடைபெறும் கொடுமைகளை தவிர்க்க வேண்டும். பாத பூஜை தொடர்பான புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் 2 முறை ஜனாதிபதியாக இருந்த பில் கிளின்டனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.