அதிமுக பொதுச்செயலாளர் என எப்படி குறிப்பிட முடியும்? - எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி

அதிமுக பொதுச்செயலாளர் என எப்படி குறிப்பிட முடியும்? என்று எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2024-07-26 11:26 GMT

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிராபகர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் ராஜலட்சுமி, இளம்பாரதி "சென்னை ஐகோர்ட்டில் பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் பழனிசாமி தன்னை இணை ஒருங்கிணைப்பாளர் என மனுதாக்கல் செய்துவிட்டு, தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எனக்கூறி பதில்மனு தாக்கல் செய்துள்ளார்" என கூறினர்.

இதற்கு கருத்து தெரிவித்த நீதிபதி, அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு எப்படி மனுதாக்கல் செய்ய முடியும்? என பழனிசாமி தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த மனுவை எப்படி பதிவுத்துறை ஏற்றுக்கொண்டது? என கேள்வி எழுப்பிய நீதிபதி, திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்ய பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்