அமெரிக்கப் பயணம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்த அனுபவங்கள்

அமெரிக்கப் பயணத்தில் தான் பெற்ற அனுபவங்கள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Update: 2024-09-16 12:25 GMT

கோப்புப்படம்

சென்னை

அமெரிக்கப் பயணத்தில் பெற்ற அனுபவங்கள் குறித்து தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கழக உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

பார்ச்சூன் 500 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள்

சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் வரவேற்பளிப்பதற்காகக் காத்திருந்த தமிழர்களின் முகங்களைப் பார்த்ததும், பனித்துளிகளில் நனைந்த பூக்களைப் போல உற்சாகம் கொண்டேன்.

ஆகஸ்ட் 29 அன்று முதலில் என்னை வந்து சந்தித்த நிறுவனம், பார்ச்சூன் 500 எனப்படும் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான நோக்கியா நிறுவனமாகும்.

அவர்கள் வந்தவுடனேயே, 1997-ஆம் ஆண்டு சென்னை மாநகரத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பபட்ட முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றிருந்த நேரத்தில் என்னை அந்த நிறுவனத்தின் தலைவர் சந்தித்த புகைப்படத்தை வழங்கினர். இனிய நினைவுகளுடனான தொடக்கமாக அமெரிக்க முதலீட்டாளர்களின் சந்திப்பு அமைந்தது.

நோக்கியா, பேபால், ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர், அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனங்களுடன் சென்னை, மதுரை, சூலூர் உள்ளிட்ட இடங்களில் நிறுவனங்களைத் தொடங்குவதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

உலகின் முன்னணி நிறுவனங்களில் கோலோச்சும் தமிழர்கள்

தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டிய அமெரிக்க நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

திராவிட இயக்கத்தின் இடஒதுக்கீடு, இருமொழிக் கொள்கை, தகவல் தொழில்நுட்பக் கொள்கை உள்ளிட்டவை அமெரிக்க நிறுவனங்களில் தமிழர்கள் உயர்பொறுப்பில் இருப்பதற்கு அடித்தளமாக உள்ளன என்பதை உணர்ந்தேன்.

திராவிட மாடல் ஆட்சியின் 14 கொள்கைகள் அடங்கிய வெளியீடுகளை அமெரிக்க நிறுவனங்களிடம் வழங்கி, விளக்கினேன். அவை உலகத் தரத்திற்கு உருவாக்கப்பட்டிருப்பதாகப் பாராட்டினர்.

தமிழ்நாட்டில்தான் திறமையான மனித வளம் இருப்பதாக அமெரிக்க நிறுவனத்தினர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

மாலையில் நடைபெற்ற முதலீட்டாளர்களுடனான மாநாட்டில், இந்தியத் தூதரக அதிகாரி ஸ்ரீகர் ரெட்டி அவர்கள், தமிழ்நாடு தொழில்துறையின் முனைப்பையும், முதலமைச்சரான என்னுடைய செயல்பாடுகளையும் எடுத்துக்கூறினார்.

சான் பிரான்சிஸ்கோவில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் நான் உரையாற்றும்போது, தமிழ்நாட்டில் அவர்களுக்குத் தேவைப்படும் கட்டமைப்புகளைத் தமிழ்நாடு அரசு நிறைவேற்றித் தரும் என்ற உறுதியை வழங்கினேன்.

அயலகத்திலும் தமிழ் உறவு - கழகக் கொள்கை உணர்வு

பேர்மாண்ட் ஹோட்டலுக்குத் திரும்பியபோது, லாபியில் தமிழர்கள் காத்திருந்தனர். ஒரு சில தமிழர்கள் என்னைப் பார்த்ததுமே உணர்ச்சிவசப்பட்டு, கண் கலங்கிவிட்டார்கள்.

அமெரிக்காவில் வசிக்கும், கழக முன்னோடி எஸ்.எஸ். தென்னரசு அவர்களின் பேரன் கதிர் தென்னரசு, 'கலைஞர் தாத்தா" என விளித்து எழுதப்பட்ட அவரது கடிதம் 20.07.2001 முரசொலியில் வெளியிடப்பட்டிருந்ததைக் காண்பித்தார்.

சென்னையில் வசிக்கும் திருவண்ணாமலையைச் சேர்ந்த கழகத்தின் மூத்த தொண்டர் ஒருவர், தமது மகள் அரசு வழக்கறிஞராக இருப்பதையும், மகன் அமெரிக்க நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருப்பதையும் குறிப்பிட்டு எழுதிய கடிதமும் என்னை நெகிழ வைத்தது.

சிலிக்கான் வேலியில், தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணி வகிக்கும் ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களைப் பார்வையிட்டு ஒப்பந்தங்கள் நிறைவேற்றினோம்.

சிலிக்கான் வேலியில் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர்கள் நமது பாரம்பரியப்படி நடத்தும் கோவை கபே உணவகத்தில், வாழை இலையில், நம் ஊர் சாப்பாட்டைப் பரிமாறினார்கள். பசிக்கேற்ற ருசியுடன் உணவு சிறப்பாக இருந்தது.

வாழ்த்தி வரவேற்ற நல் உள்ளங்கள்

அன்று மாலையில் சான் பிரான்சிஸ்கோவில் அமெரிக்கவாழ் தமிழர்கள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுடனான சந்திப்புக்கு இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.

சிறிய அரங்கம் - நிறைந்த கூட்டம் பொங்கி வழிந்த பேரன்பு - வாழ்த்து முழக்கங்கள் என உள்ளம் ஒன்றிய நிகழ்வாக அது அமைந்தது.

மறுநாள் செப்டம்பர் 1 அன்று பசுமை ஹைட்ரஜன் தயாரிப்பதில் உலகின் முன்னணி நிறுவனமான ஓமியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அறிவியல் தொழில்நுட்பம் எந்தளவில் வளர்ந்திருக்கிறது என்பதையும், அதில் அமெரிக்கா எந்தளவு முன்னேறியிருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வாய்ப்பாக ஆள் இல்லாத காரில் பயணம் செய்த அனுபவம் அங்குதான் கிடைத்தது.

எழில்மிகு சான் பிரான்சிஸ்கோ கடற்கரையில் சைக்கிள் ஓட்டியது இனிய அனுபவமாக இருந்தது.

சான் பிரான்சிஸ்கோ போலவே சிகாகோ விமானநிலையத்தில் திரண்டிருந்த தமிழர்கள், நமது பாரம்பரிய உடையுடனும், பறை இசை, பண்பாட்டு நடனம் என அவர்கள் அளித்த வரவேற்பு, பெரும் நம்பிக்கையை அளிப்பதாக இருந்தது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்