காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் பறித்த ஆணை ரத்து

காசோலையில் ஊராட்சித் தலைவர்கள் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்த உத்தரவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-09-16 15:44 GMT

கோப்புப்படம்

சென்னை,

கோவை மாவட்டம் சோமயம் பாளையம் உள்ளிட்ட 3 ஊராட்சி மன்றங்களின் தலைவர்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி இழப்புகளை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டி, அவர்கள் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து 3 ஊராட்சித் தலைவர்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ராஜசேகர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி ஊராட்சிகளில் பணிகளை நிறைவேற்றும் வகையில் காசோலையில் கையெழுத்திட தலைவரோ, துணைத் தலைவரோ மறுக்கும் பட்சத்தில், அந்த திட்டத்தை நிறைவேற்ற, காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்ய மாவட்ட கலெக்டருக்கு அதிகாரம் உள்ளது" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதே சமயம் தவறான நிர்வாகம், நிதி முறைகேடு போன்ற குற்றச்சாட்டுகளுக்காக காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்யும் சட்டப் பிரிவை பயன்படுத்த முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், ஊராட்சித் தலைவர்களின் விளக்கத்தை கேட்காமல் காசோலை அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆகவே, மாவட்ட கலெக்டரின் உத்தரவுகளை ரத்து செய்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 3 ஊராட்சித் தலைவர்களின் வழக்குகளில், சட்டப்படி உரிய நடைமுறைகளை பின்பற்றி புதிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்