திருவண்ணாமலை அருகே கார், அரசு பஸ் மோதி விபத்து: 2 பேர் பலி
துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.;
திருவண்ணாமலை,
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த பாடியந்தல் கிராமத்தில் வசிப்பவர் ஞானசேகரன் (55). இவர் தனது மனைவி வளர்மதி (52), மருமகள் ஜெயந்தி (22), பேத்தி ரிதன்யா (2) ஆகியோருடன் சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் அருகே உள்ள ஊத்தூர் கிராமத்தில், உறவினரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, பாடியந்தல் கிராமத்தில் உள்ள வீட்டுக்கு காரில் இன்று மதியம் திரும்பினர்.
இந்தநிலையில், திருவண்ணாமலை - போளூர் தேசிய நெடுஞ்சாலை கலசப்பாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் வந்தபோது கார் மற்றும் காருக்கு முன்பாக சென்ற பைக் மீது எதிரே வந்த அரசு பஸ் மோதி, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி நின்றது. கார் அப்பளம்போல் நொறுங்கி முழுமையாக சேதம் அடைந்தது. அரசு பஸ்சின் முன்பகுதி சேதமடைந்தது. விபத்தில் சிக்கியவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் ஓடிசென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
கலசப்பாக்கம் காவல்துறையும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய கார் மற்றும் பஸ்சில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் வளர்மதி மற்றும் கார் ஓட்டுநரான திருக்கோவிலூர் அடுத்த தீம்மச்சூர் கிராமத்தில் வசிக்கும் கோபிநாத் (45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். ஞானசேகரன், ஜெயந்தி, ரிதன்யா ஆகியோர் படுகாயமடைந்தனர்.
மேலும், காருக்கு முன்பாக இரு சக்கர வாகனத்தில் சென்ற கலசப்பாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தில் வசிக்கும் வேலு (50) மற்றும் அரசு பஸ்சில் பயணித்த பெண் பயணி ஒருவரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து அரசு பஸ் ஓட்டுநர் லோகநாதன் (50) மீது வழக்குப் பதிவு செய்து கலசப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.