ரேஷன் கடையை உடைத்து, கரும்புகளை கபளீகரம் செய்த காட்டு யானைகள்

ரேஷன் கடையை உடைத்து, அங்கிருந்த கரும்புகளை காட்டு யானைகள் கபளீகரம் செய்தன.;

Update:2025-01-10 19:29 IST

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் கரும்பு கட்டுகள் வைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் வனப்பகுதி மற்றும் தேயிலை தோட்டங்கள் அருகே உள்ள ரேஷன் கடைகளை தேடி காட்டு யானைகள் வர தொடங்கி உள்ளன. கூடலூர் தாலுகா நாடுகாணி அருகே பாண்டியாறு குடோன் பகுதியில் ரேஷன் கடை உள்ளது. இங்கு தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள் மாதந்தோறும் அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதற்காக கரும்பு கட்டுகள் ரேஷன் கடைக்குள் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நேற்று இரவு அப்பகுதிக்கு வந்த காட்டு யானைகள் ரேஷன் கடையின் கதவை உடைத்து, உள்ளே இருந்த பதிவேடுகள், விற்பனை முனைய எந்திரத்தை வெளியே தூக்கி வீசி உடைத்து சேதப்படுத்தியது. அதோடு அங்கிருந்த அத்தியாவசிய பொருட்களை தின்றன.

இருப்பினும், பரிசுத்தொகுப்புக்கான பச்சரிசி, கரும்பு போன்றவை உள் அறைக்குள் பாதுகாப்பாக இருந்ததால், அதை வெளியே எடுக்க முடியாமல் காட்டு யானைகள் சிரமப்பட்டன. அதோடு கரும்பு கட்டுகளை எடுத்து ருசிக்க முடியவில்லை. இதனிடையே சத்தம் கேட்டு எழுந்த அக்கம்பக்கத்தினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே நாடுகாணி வனத்துறையினர் அங்கு வந்து காட்டு யானைகளை விரட்டினர்.

இருப்பினும், கரும்பு கட்டுகளை தேடி காட்டு யானைகள் அப்பகுதிக்கு வர வாய்ப்பு உள்ளது என்று பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் காட்டு யானைகள் வரக்கூடிய இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் கூடுதல் கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்