'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
புதுடெல்லி,
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்த முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு சமர்ப்பித்த அறிக்கையை, மத்திய அமைச்சரவை கடந்த செப்., 18ம் தேதி ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், இது தொடர்பான மசோதா, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இதனிடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்கிய நாளில் இருந்து, அதானி லஞ்ச விவகாரத்தை எழுப்பி, தினமும் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மேலும் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன.
இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. தலைநகர் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பிற்பகல் 1 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளதாகவும், அரசின் சில முக்கியத் திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத்தொடர்ந்து நடப்பு கூட்டத்தொடரிலே மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு ஆயத்தமாகி உள்ளது.
நாடு முழுவதும் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளநிலையில், இது நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும்.
2029 தேர்தலுக்கு முன் சட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.