துப்பட்டாவில் தூக்குப்போட்டு பள்ளி மாணவி தற்கொலை
தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.;
புவனேஸ்வர்
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரை சேர்ந்தவர் உத்காலிகா ஸ்வைன், இவர் உத்கல் சங்கீத் மகாவித்யாலயாவில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தோழிகளுடன் தங்கியிருந்தார். இந்நிலையில் தோழிகள் இருவரும் சொந்த ஊருக்கு சென்ற நிலையில் உத்காலிகா அறையில் தனியாக இருந்தார். பின்னர் இன்று காலை தோழிகள் இருவரும் விடுதிக்கு திரும்பினர்.
வந்தவர்கள் வெகுநேரமாக அறையின் கதவை தட்டினர். வெகு நேரம் ஆகியும் உத்காலிகா கதவை திரக்கவில்லை. இதனால் அங்கு வந்த விடுதியின் காவலர் மற்றும் சக தோழிகள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு உத்காலிகா தனது துப்பட்டாவை பயன்படுத்தி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பதைக் கண்டு அனைவரும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் தகவல் அறிந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் போனை போலீசார் கையகப்படுத்தினர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.