ஷிண்டேவுக்கு எதிராக அவதூறு பேச்சு; கம்ராவுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை: மராட்டிய மந்திரி
மராட்டிய துணை முதல்-மந்திரி ஷிண்டேவை, துரோகம் இழைத்தவர் என கம்ரா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.;

புனே,
மராட்டியத்தின் துணை முதல்-மந்திரியாக சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு எதிராக ஸ்டாண்ட்-அப் காமெடி செய்பவரான குணால் கம்ரா, அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியது சர்ச்சையானது.
இதனை தொடர்ந்து, அவர் நிகழ்ச்சி நடத்திய ஓட்டல் மற்றும் ஓட்டலில் அவர் நிகழ்ச்சி நடத்திய ஸ்டுடியோ மீது சிவசேனா தொண்டர்கள் நேற்றிரவு கடுமையாக தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில், குணாலுக்கு எதிராக மும்பை போலீசார் இன்று எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். இதேபோன்று, குணால் நிகழ்ச்சி நடத்திய ஸ்டுடியோ மற்றும் ஓட்டல் மீது தாக்குதல் நடத்திய சிவசேனா நிர்வாகியான ராகுல் கனால் மற்றும் 11 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.
இதுபற்றி மராட்டிய உள்துறை மந்திரி யோகேஷ் கதம் நிருபர்களிடம் இன்று கூறும்போது, சட்டம் அனைவருக்கும் சமம் என கூறியதுடன், கம்ராவின் பேச்சுக்கு எதிராக மும்பையில் உள்ள ஸ்டுடியோவை தன்னுடைய கட்சி தொண்டர்கள் தாக்கியதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும் கூறினார்.
ஆனால், தொண்டர்களின் ஆத்திரம் எந்தளவுக்கு உள்ளது என்றும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் கூறினார். கம்ரா தங்கியுள்ள இடம் பற்றிய விவரம் கண்டறியப்பட்டு உள்ளது என கூறிய மந்திரி கதம், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
மும்பையின் கர் பகுதியில் உள்ள யூனிகான்டினென்டல் ஓட்டலில், ஹேபிடட் என்ற ஸ்டுடியோவில் நேற்று நடந்த நிகழ்ச்சியின்போது, துணை முதல்-மந்திரி மற்றும் சிவசேனா தலைவரான ஷிண்டேவை, துரோகம் இழைத்தவர் என கூறினார்.
2022-ம் ஆண்டு உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக ஷிண்டே செயல்பட்டது அப்போது பரபரப்பாக பார்க்கப்பட்டது. இதனை விவரிக்கும் வகையில், தில் தோ பாகல் ஹை என்ற படத்தில் இடம் பெற்ற இந்தி பாடலின் வரிகளை, கம்ரா உருமாற்றி பாடினார். மராட்டிய தேர்தலுக்கு அவர் என்ன செய்துள்ளார் என நாம் குறிப்பிட்டாக வேண்டும் என்றார்.
முதலில் அவர்கள் என்ன செய்தனர்? பா.ஜ.க.வை விட்டு வெளியேறினர். பின்பு, சிவசேனாவை விட்டும் விலகினர் என பாடலை பாடினார். இதனால், ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து அவருடைய நிகழ்ச்சி நடந்த ஸ்டுடியோ மற்றும் ஓட்டல் மீது சிவசேனா தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.