நாசிக் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - மராட்டிய முதல்-மந்திரி அறிவிப்பு
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்ததோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்தார்;
மும்பை,
மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் வர்கா நகரில் நேற்று இரும்பு கம்பி ஏற்றிக்கொண்டு லாரி சென்றுகொண்டிருந்தது. அதேபோல், நிப்ஹட் நகரில் இருந்து 16 பேருடன் சிட்கோ தொழிற்பேட்டைக்கு டெம்போ சென்றுகொண்டிருந்தது.
வர்கா நகர் அருகே அய்யப்பன் கோவில் சாலையில் சென்றுகொண்டிருந்த டெம்போ எதிரே இரும்பு கம்பி ஏற்றி வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் டெம்போவில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மராட்டிய மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்ததோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்தார்.