உத்தர பிரதேச மகா கும்பமேளா புனித சங்கமத்தில் முதல் நாளில் 1 கோடி பேர் நீராடினர்

உத்தர பிரதேசத்தின் மகா கும்பமேளா நிகழ்ச்சியில், கங்கை மற்றும் யமுனை ஆகிய இரு ஆறுகள் சங்கமிக்கும் புனித பகுதியில் முதல் நாளான இன்று 1 கோடி பேர் நீராடியுள்ளனர்.;

Update:2025-01-13 19:21 IST

பிரயாக்ராஜ்,

உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி இன்று தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரையிலான 45 நாட்கள் இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும்.

இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

இந்தியாவின் பழமையான கலாசாரம் மற்றும் மத பாரம்பரியங்களை உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றும் பெருமை மிக்க மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்க கூடும்.

இந்தளவுக்கு பெருமை வாய்ந்த உத்தர பிரதேசத்தின் மகா கும்பமேளா நிகழ்ச்சியில், கங்கை மற்றும் யமுனை ஆகிய இரு ஆறுகள் சங்கமிக்கும் புனித பகுதியில் முதல் நாளான இன்று 1 கோடி பேர் நீராடியுள்ளனர் என டி.ஜி.பி. பிரசாந்த் குமார் கூறியுள்ளார்.

சங்கமம் பகுதியில் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். இதனால், நிறைய காவலர்கள் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். ஆளில்லா விமானங்கள் உதவியுடன் காவல் நிர்வாகம் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. நீருக்கடியிலும் ஆளில்லா விமானங்கள் கண்காணிப்பு பணியை செய்து வருகிறது.

இதுவரை துரதிர்ஷ்டவச சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். பிரயாக்ராஜ் நகருக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் வாகன போக்குவரத்து சீராக நடந்து வருகிறது. மூத்த அதிகாரிகள் மற்றும் முதல்-மந்திரி அலுவலக அதிகாரிகள் என அனைவரும் நிலைமையை கண்காணித்து வருகிறோம் என்றும் டி.ஜி.பி. பிரசாந்த் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்