அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து : பெண் பலி
அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.;
புதுடெல்லி
டெல்லியின் பஸ்சிம் பூரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதாக நேற்று இரவு 10 மணியளவில் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து மூன்று தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சில மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர்
இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு அறையில் கருகிய நிலையில் ஒரு பெண்ணின் உடலை கண்டுபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் தீயில் சிக்கி காயமடைந்த 2 பேரை மீட்புக்குழுவினர் மீட்டு அருகில் உள்ள ஆச்சார்யா பிக்சு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
பின்னர் இதில் உயிரிழந்த பெண் நிர்மலா (65) எனவும் காயமடைந்தவர்கள் பிரஹலாத் மற்றும் ஜிதேந்தர் எனவும் அடையாளம் காணப்பட்டது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.