ரீல்ஸ் மோகம்: தண்டவாளத்தில் வீடியோ எடுத்த வாலிபர்கள் ரெயிலில் அடிபட்டு உயிரிழப்பு

ரீல்ஸ் மோகத்தில் தண்டவாளத்தில் நின்று வீடியோ எடுத்த வாலிபர்கள் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தனர்.;

Update:2024-11-02 06:13 IST

கோப்புப்படம் 

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டம் இக்டில் அருகே ஹிரன்பூரை சேர்ந்தவர்கள் அனுஜ் குமார் (20 வயது), ரஞ்சித் குமார் (16 வயது). இவர்கள் சமூகவலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவிடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். இவர்கள், நேற்று அதிகாலை இக்டில் ரெயில் நிலையம் பகுதிக்கு சென்றனர்.

அப்போது அந்த வழியாக ஹம்சாபர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. தூரத்தில் ரெயில் வருவதை பார்த்த அவர்களுக்கு, ரெயில் வரும்போது தண்டவாளத்தில் நின்றபடி வீடியோ எடுத்து ரீல்ஸ் பதிவிடவேண்டும் என்ற விபரீத எண்ணம் ஏற்பட்டது. அதன்படி தங்களது செல்போனில வீடியோ எடுத்துக்கொண்டு இருந்தனர். 'ரீல்ஸ்' வீடியோ எடுப்பதில் ஆர்வமாக இருந்த அவர்கள், ரெயில் தங்களது அருகே வந்ததை பார்க்கவில்லை.

அவர்கள் திரும்பி பார்ப்பதற்குள் வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு, உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்