பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Update: 2024-08-28 18:18 GMT

புதுடெல்லி,

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பாரீசில் இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. தொடக்க விழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், நடனம், சாகசங்கள், வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு இடம் பெற்றன. அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந்தேதி வரை அரங்கேறும் இந்த போட்டியில் 184 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதில் 22 விளையாட்டுகளில் 549 பந்தயங்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.

இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி களம் காணுகிறது. பாராஒலிம்பிக்கில் இந்தியாவின் அதிகபட்ச எண்ணிக்கை இதுதான். இளமையும், அனுபவமும் வாய்ந்த அவர்கள் வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், சைக்கிளிங், ஜூடோ, வலுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், தேக்வாண்டோ, துடுப்பு படகு, கனோயிங் (சிறிய துடுப்பு படகு) ஆகிய 12 விளையாட்டுகளில் திறமையை வெளிப்படுத்த காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "பாராஒலிம்பிக்கில் பங்கேற்கும் எங்கள் குழுவிற்கு 140 கோடி இந்தியர்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஒவ்வொரு விளையாட்டு வீரரின் தைரியமும் உறுதியும் தேசத்தின் உத்வேகத்திற்கு ஆதாரமாக உள்ளது; ஒவ்வொருவரும் தங்களது வெற்றிக்காக வேரூன்றி உள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்