பீகார்: ஆளுங்கட்சி மகளிரணி தலைவரை அடித்து, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம்

பீகாரில் ஆளுங்கட்சி மகளிரணி தலைவரை, கவுன்சிலர் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் சேர்ந்து அடித்து, உதைத்து தெருவில் தரதரவென இழுத்து சென்றுள்ளனர்.;

Update:2024-09-20 01:59 IST

பாட்னா,

பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியை சேர்ந்த மாவட்ட மகளிரணி தலைவராக இருப்பவர் காமினி பட்டேல். இந்நிலையில், சீதாமார்ஹி மாவட்டத்தில் பைர்கனியா பகுதியில் அக்கட்சி சார்பில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ஆனால், இதற்கு காமினியை அழைக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த காமினி பேஸ்புக்கில் அதுபற்றி பதிவிட்டு உள்ளார். விமர்சனங்களை வெளியிட்ட சிலருக்கு எதிராக காரசார பதில் விமர்சனங்களும் வெளியிடப்பட்டன.

இந்த சூழலில், அக்கட்சியின் வார்டு கவுன்சிலர் சஞ்சய் சிங்கின் வீட்டுக்கு நேற்று காலை காமினி சென்று தகராறில் ஈடுபட்டு உள்ளார். சஞ்சயை நேரில் சந்தித்து, நிகழ்ச்சிக்கு தன்னை அழைக்காததுபற்றி கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

அப்போது, கவுன்சிலர் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் சேர்ந்து காமினியை அடித்து, உதைத்துள்ளனர். அவரை திருடி என கூறி, அவருக்கு செருப்பு மாலை அணிவித்து கவுன்சிலரின் வீட்டுக்கு அருகே இருந்த தெருவில் காமினியை தரதரவென இழுத்து சென்றுள்ளனர்.

இதுபற்றிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், காமினியின் முகம் வீங்கிய நிலையிலும், உடலில் காயங்களுடனும், கழுத்தில் செருப்பு மாலை அணிந்தபடியும் காணப்படுகிறார். சுயநினைவற்ற நிலையில் இருந்த அவரை மீட்டு உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து, சஞ்சய் சிங்கை போலீசார் காவலுக்கு கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர். பேஸ்புக்கில் விமர்சனங்கள் வெளியான விவகாரத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்