பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்

மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்கார வழக்கில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர் ஓட்டலுக்கான தனி செயலி ஒன்றின் வழியே அறையை முன்பதிவு செய்து இரவில் தங்கி உள்ளார்.

Update: 2024-09-19 21:55 GMT

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த மாதம் 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த வழக்கை போலீசார் விசாரித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவையடுத்து, சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரியும், பெண் டாக்டருக்கு நீதி வேண்டும் என கோரியும், சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கில், ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரியின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ் மற்றும் தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான அபிஜித் மொண்டல் ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. இதனால் வழக்கில் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. இந்த சூழலில், இந்த சம்பவத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆஷிஷ் பாண்டே என்பவர் ஆகஸ்டு 9-ந்தேதி சால்ட் லேக் பகுதியில் உள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கியது சி.பி.ஐ. விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனால், சி.பி.ஐ. அவரை விசாரணை வளையத்தில் கொண்டு வந்துள்ளது. விசாரணையின் ஒரு பகுதியாக பல்வேறு மொபைல் போன்களை ஆய்வு செய்ததில், சால்ட் லேக் பகுதியில் அவர் தங்கிய விவரம் சி.பி.ஐ.க்கு தெரிய வந்துள்ளது. அவர், ஆர்.ஜி. கார் மருத்துவமனையில் ஒரு பணியாளராகவும் இருந்து வருகிறார்.

இந்த விவரம் தெரிய வந்ததும், அந்த ஓட்டல் நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டது. ஓட்டலின் பதிவேட்டை பணியாளரிடம் கொடுத்து அனுப்பும்படி அதில் கேட்டு கொள்ளப்பட்டது. இதன்படி, பதிவேடு மற்றும் பிற ஆவணங்கள் சி.பி.ஐ. அமைப்பிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

ஓட்டலுக்கான தனி செயலி ஒன்றின் வழியே அறையை முன்பதிவு செய்து இரவில் தங்கி விட்டு மறுநாள் காலையில் வெளியேறி சென்றுள்ளார். இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்