திருப்பதியில் நாளை மறுநாள் கைசிக துவாதசி ஆஸ்தானம்

திருமலையில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே உக்ர சீனிவாச மூர்த்தி கோவிலில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.;

Update: 2024-11-11 09:28 GMT

திருப்பதி:

பகவான் மகாவிஷ்ணு ஆசாட மாதம் சுக்ல ஏகாதசி அன்று சயன கோலத்துக்குச் செல்வார். அப்போது சயன கோலத்துக்குச் சென்றவர், கைசிக துவாதசி அன்று சயன கோலத்தில் இருந்து எழுவதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. மகாவிஷ்ணு சயன கோலத்தில் இருந்து எழுவதை வரவேற்கும் விதமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கைசிக துவாதசி விழா கொண்டாடப்படுகிறது.

அவ்வகையில் நாளை மறுநாள் (13.11.2024) கைசிக துவாதசி ஆஸ்தான விழா நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை சுப்ரபாத சேவை, தோமால சேவையைத் தொடர்ந்து கோவிலில் உள்ள பஞ்சமூர்த்திகளில் ஒருவரான உற்சவர் உக்ர சீனிவாசமூர்த்தி தனது உபநாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.

அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை வீதியுலா நிகழ்வு நடைபெறும். அதன்பின்னர் உற்சவ மூர்த்திகள் கோவிலுக்குள் கொண்டு செல்லப்படுகின்றனர். அங்கு கைசிக துவாதசி ஆஸ்தானம் நடைபெறும்.

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே உக்ர சீனிவாச மூர்த்தி கோவிலில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மற்ற திருவிழாக்கள் மற்றும் ஆன்மிக நிகழ்வுகளின் போது, மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

உக்ர சீனிவாசமூர்த்திக்கு வேங்கடத்து உறைவார், ஸ்நபன பேரர் என்ற பெயர்களும் உண்டு. 14-ம் நுாற்றாண்டு வரை உற்சவமூர்த்தியாக இருந்தவர் இவரே. சூரிய ஒளி மேனியில் பட்டால் உக்ரம் அடைவார் என்பதால், ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் கைசிக துவாதசியன்று மட்டுமே, உக்ர சீனிவாசமூர்த்தி (உற்சவர்) கருவறையிலிருந்து வெளியே கொண்டு வரப்படுகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்