திருவண்ணாமலை தீபத் திருவிழா நிறைவு: அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு பரிகார பூஜை
திருவண்ணாமலையில் அண்ணாமலையார் பாதத்திற்கு இன்று சிறப்பு பரிகார பூஜை செய்யப்பட்டுள்ளது.;
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் கடந்த டிசம்பர் 13-ந்தேதி கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 11 நாட்கள் காட்சி அளித்த மகாதீபத்தை தரிசனம் செய்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
சுமார் 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம், மழை மற்றும் பலத்த காற்றிலும் சுடர் விட்டு எரிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தது. இதைத் தொர்ந்து மகாதீபம் ஏற்றப்பட்ட தீப கொப்பரை 11 நாட்களுக்கு பிறகு கீழே இறக்கி கொண்டு வரப்பட்டது. பின்னர் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அண்ணாமலையார் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், அண்ணாமலையார் பாதத்திற்கு இன்று சிறப்பு பரிகார பூஜை செய்யப்பட்டுள்ளது. தீபத் திருவிழாவின்போது மலையின் மீது பக்தர்கள் சென்று வந்ததாலும், பக்தர்களின் காலடி தடத்தினால் எழுந்த தோஷங்களை நிவர்த்தி செய்யும் வகையிலும் அண்ணாமலையார் மலையின் மீதுள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு பரிகார பூஜை நடைபெற்றது.
இதையொட்டி, அண்ணாமலையார் கோவில் கருவறையில் புனித நீர் கொண்ட கலசங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் ஊழியர்களால் புனித நீர் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு பரிகார பூஜை செய்யப்பட்டது.