கிருஷ்ணரின் அஷ்ட வடிவங்கள்

காளிங்கன் என்ற நாகத்தின் மீது நர்த்தனம் புரியும் கிருஷ்ணரின் வடிவம் காளிய கிருஷ்ணன்.;

Update: 2025-01-05 07:09 GMT

மகாவிஷ்ணு, தேவர்களுக்காகவும், மனிதர்களுக்காகவும் பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளார். அதில் 10 அவதாரங்கள், 'தசாவதாரங்கள்' என்று சிறப்பிக்கப்படுகின்றன. அந்த 10 அவதாரங்களிலும் பல லீலைகள் கொண்டதாகவும், சிறப்புக்குரியதாகவும் கருதப்படுவது கிருஷ்ண அவதாரம். அந்த கிருஷ்ண பகவானின் எட்டு வடிவங்கள், பெருமைக்குரியதாக போற்றப்படுகின்றன.

* சந்தான கோபால கிருஷ்ணன்: வளர்ப்புத் தாயான யசோதையின் மடியில்பாலகனான கிருஷ்ணர் அமர்ந்திருக்கும் கோலம் இது.

* பாலகிருஷ்ணன்: பாலகனாக கிருஷ்ணரின் தவழும் கோலம் இது. ஆலயங்களில் கிருஷ்ணன் சன்னிதிகளிலும், பலரது வீட்டில் பூஜை அறையிலும் பாலகிருஷ்ணனின் படத்தை காணலாம்.

* காளிய கிருஷ்ணன்: யமுனை நதியில் உள்ளே இருந்த காளிங்கன் எனும் பாம்பின் மீது கிருஷ்ணர் நடனமாடி காளிங்கனின் ஆணவத்தை அடக்கி அதை அந்த இடத்தில் இருந்து அகற்றுவார். காளிங்க நர்த்தன கோலத்தில் கிருஷ்ணர் காட்சி தருவதே காளிய கிருஷ்ணன் அல்லது காளிங்க நர்த்தன கிருஷ்ணன் என்று அழைக்கப்படுகிறார்.

* கோவர்த்தனதாரி: ஒட்டுமொத்த ஊரும் இடி, மின்னலுடன் கூடிய பெருமழையால் உயிர் பயத்துடன் இருந்தபோது கோவர்த்தனமலையை கிருஷ்ணர் தனது ஒற்றை விரலால் தூக்கி நிறுத்தி, அதன் கீழ் பசுக்கள், மனிதர்கள் என அனைத்து உயிர்களையும் காப்பாற்றியதாக புராணங்கள் கூறுகின்றன. கோவர்த்தன மலையை, கிருஷ்ண பகவான் தன்னுடைய சுண்டு விரலால் தாங்கி நிற்கும் திருக்கோலமே கோவர்த்தனதாரி.

* ராதா கிருஷ்ணன் (வேணு கோபாலன்): ராதையுடன் கண்ணன் காட்சி தரும் கோலமே ராதாகிருஷ்ணன் கோலம். வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பாக வைத்து, தன் அருகில் ராதை நின்றிருக்க குழலூதும் கோலத்தில் அருளும் கிருஷ்ணனின் வடிவம் இது.

* முரளீதரன்: கிருஷ்ணர், தன்னுடைய பட்டத்து ராணிகளில் முதன்மையானவர்களான ருக்மணி மற்றும் சத்யபாமா ஆகியோருடன் நின்றிருக்கும் திருக்கோலம் இது.

* மதனகோபாலன்: அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் கிருஷ்ணனின் வடிவம் இது.

* பார்த்தசாரதி: அர்ச்சுனனுக்கு கிருஷ்ணர் சாரதியாக சென்று உபதேசம் செய்யும் கோலமே பார்த்தசாரதி கோலம். தேரின் மீது அர்ச்சுனன் அமர்ந்திருக்க, தேரில் பூட்டப்பட்ட குதிரைகளின் கயிற்றைப் பிடித்தபடி தேரோட்டியாக கிருஷ்ணர் அமர்ந்திருப்பார். 

Tags:    

மேலும் செய்திகள்