சித்திரை மாத ராசி பலன்கள் 14-04-2022 முதல் 14-05-2022 வரை
விடாமுயற்சியே வெற்றிக்கு வழிகாட்டும் என்று கூறும்மேஷ ராசி நேயர்களே!
சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய், தன -சப்தமாதிபதியான சுக்ரனோடு இணைந்திருக்கிறார். எனவே தொழில் முன்னேற்றம் உண்டு.
மீன -சுக்ரன் சஞ்சாரம்
சித்திரை 15-ந் தேதி, மீன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்கு மாதப்பிறப்புக்கு முன்னதாக பெயர்ச்சியாகும் குருவோடு இணைகிறார். மீனம், சுக்ரனுக்கு உச்ச வீடு. அசுர குரு உச்சம் பெற்று, தேவ குருவின் சொந்த வீட்டில் அவரோடு இணைந்து சஞ்சரிக்கும் பொழுது நிறைய மாற்றங்கள் ஏற்படும். தன ஸ்தானாதிபதியான சுக்ரன் உச்சம் பெறுவதால் தனவரவு தாராளமாக வந்து சேரும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும். விரய ஸ்தானத்தில் சுக்ரன் இருப்பதால் விரயங்கள் ஏற்பட்டாலும், அவை சுப விரயங்களாகவே இருக்கும்.
ரிஷப - புதன் சஞ்சாரம்
சித்திரை 15-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், தேவைக்கேற்ப தனவரவு வந்து கொண்டே இருக்கும். உத்தியோக ஸ்தானத்தை குரு பார்ப்பதால், உத்தியோகத்தில் வெற்றி கிடைக்கும். உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, மீண்டும் அழைப்புகள் வரலாம். இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.
புதன் வக்ர இயக்கம்
சித்திரை 17-ந் தேதி, ரிஷபத்தில் புதன் வக்ரம் பெறுகிறார். 3-க்கு அதிபதி வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. சகோதர ஒற்றுமை குறையும். பகையை வளராமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்பு கிடைக்கலாம். பணிச்சுமையின் காரணமாக மன அழுத்தம் ஏற்படும். இருப்பினும் முக்கியப் பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். கேட்ட சலுகை கிடைக்காது. விரய குருவின் ஆதிக்கம் வலுவாக இருப்பதால் யோசித்து முடிவெடுங்கள்.
மேஷ -புதன் சஞ்சாரம்
சித்திரை 21-ந் தேதி, மேஷ ராசிக்கு வக்ர இயக்கத்தில் புதன் பின்னோக்கி வருகிறார். அங்கு, உச்சம் பெற்ற சூரியனோடு இணைந்து 'புத-ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். சூரியனும், சுக்ரனும் உச்சம் பெற்றிருக்கின்றனர். குரு, சனி ஆகிய இரண்டு கிரகங்களும் சொந்த வீட்டில் சஞ்சரிக்கின்றன. நான்கு கிரகங்கள் பலம் பெற்றிருக்கும் இந்த நேரத்தில், நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். சில மாற்றங்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சுயதொழில் தொடங்க முயற்சிப்பர். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும்.
இம்மாதம் சூரியன்-ராகு சேர்க்கை இருப்பதால், துர்க்கையையும், சூரியனையும் வழிபடுங்கள்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஏப்ரல்: 21, 22, 26, 27, மே: 2, 3, 8, 9மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன்- மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் மூத்தவர்களின் ஆலோசனைப்படி நடப்பதன் மூலம் அமைதியான வாழ்க்கை மலரும். பிள்ளைகளின் கல்வி மற்றும் கல்யாணம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. சகப் பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.