மேஷம் - தமிழ் மாத ஜோதிடம்

Update:2022-10-18 00:15 IST

ஐப்பசி மாத ராசி பலன்கள் 18-10-2022 முதல் 16-11-2022 வரை

கருத்துக்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளும் மேஷ ராசி நேயர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் சகாய ஸ்தானத்தில் இருக்கிறார். இவர் மாதத்தின் மையப் பகுதியில் வக்ரம் பெறுவதால் உடல்நலனில் கவனம் தேவை. எந்தக் காரியமும் அதிக முயற்சிக்குப் பிறகே பலன் தரும்.

துலாம் - சுக்ரன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், மாதத்தின் முதல் நாளில் வலிமை இழந்திருக்கிறார். ஐப்பசி 2-ந் தேதி துலாம் ராசிக்குச் செல்லும் சுக்ரன், அது சொந்த வீடு என்பதால் பலம் பெறுகிறார். தனாதிபதி பலம் பெறுவதால் பொருளாதாரம் சரளமாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள், இல்லத்தில் தானாக நடைபெறும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து வருமானம் உயரும்.

துலாம் - புதன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் ஐப்பசி 6-ந் தேதி துலாம் ராசிக்குச் செல்கிறார். அங்குள்ள சுக்ரனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். இதனால் பொருளாதார நிலை உயரும். பழைய கடன்களை கொடுத்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வாகனம் வாங்கவும், வீடு கட்டவும் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தால், அது கிடைக்கப்பெறும். கடமையைச் சரிவரச் செய்து பக்கத்தில் இருப்பவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள்.

மிதுன - செவ்வாய் வக்ரம்

ஐப்பசி 18-ந் தேதி மிதுனத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ரமாகிறார். உங்கள் ராசிநாதன் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கியத்தில் அடிக்கடி தொல்லை ஏற்படும். அது மட்டுமல்லாமல் அலுவலகப் பணிகளை முடிக்க முடியாமல் திணறுவீர்கள். பணியில் ஓய்வின்றி உழைக்க வேண்டியதிருக்கும். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்ய இயலாது. சகோதர வர்க்கத்தினரால் சஞ்சலங்கள் ஏற்படலாம். 'தனவரவு வந்தாலும் அது தங்கவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். எதைச் செய்தாலும் அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செய்யுங்கள். மிதுனத்தில் உள்ள செவ்வாயின் பார்வை மகரத்தில் உள்ள சனி மீது பதிவதால், உத்தியோகம் மற்றும் தொழிலில் அதிக கவனம் தேவை.

விருச்சிக-புதன் சஞ்சாரம்

ஐப்பசி 23-ந் தேதி, விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், அஷ்டமத்தில் அடிெயடுத்து வைக்கிறார். இதனால் 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கு ஏற்ப பல நல்ல வாய்ப்புகள் தேடிவரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருப்பர். இழந்தவற்றை மீண்டும் பெறும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் தற்காலிகப் பணியில் இருப்பவர்களுக்கு நிரந்தரப் பணி அமையும்.

விருச்சிக - சுக்ரன் சஞ்சாரம்

ஐப்பசி 26-ந் தேதி, விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல் கிறார். உங்கள் ராசிக்கு தன, சப்தமாதிபதியான சுக்ரன், விருச்சிகத்தில் இருந்தபடியே தன ஸ்தானத்தைப் பார்ப்பதால் தனவரவு திருப்தி தரும். குடும்ப முன்னேற்றம் கூடும். புதிய உத்தியோகத்திற்காக முயற்சி செய்தவர்களுக்கு அது கைகூடும். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான சூழல் உருவாகும்.

குரு வக்ர நிவர்த்தி

உங்கள் ராசிக்கு 12-ம் இடமான விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, ஐப்பசி 30-ந் தேதி வக்ர நிவர்த்தி ஆகிறார். இதனால் விரயங்கள் அதிகரிக்கும். குடும்பச்சுமை கூடும். வரவைக் காட்டிலும் செலவு இருமடங்காகும். ஒரு சில காரியங்களில் நினைத்தது ஒன்றும் நடந்தது ஒன்றுமாக இருக்கும். எதையும் யோசித்துச் செய்ய வேண்டிய நேரம் இது. இதுபோன்ற காலங்களில் சுபவிரயங்களை மேற்கொள்ளுங்கள்.

இம்மாதம் செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபட்டால் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- அக்டோபர்: 18, 19, 30, 31, நவம்பர்: 1, 3, 4, 9, 10, 14, 15, 16.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

பெண்களுக்கான பலன்கள்

உங்கள் ராசிநாதன் செவ்வாய் வக்ரம் அடைவதால், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆதாயம் இல்லாத அலைச்சல் அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமை பலப்படும். இருப்பினும் மன அமைதி குறைவாகவே இருக்கும். பிள்ளைகள் வழியில் சில விரயங்கள் ஏற்படலாம். இடம், வீடு வாங்குவது பற்றிச் சிந்திப்பீர்கள். குரு வக்ர நிவர்த்தியாகும் இம்மாதத்தில் உத்தியோகத்தில் மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து சேரும். செவ்வாய்- சனி பார்வை ஏற்படும் காரணத்தால், எந்த காரியத்தையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.

மேலும் செய்திகள்