மேஷம் - ஆவணி தமிழ் மாத ஜோதிடம்

Update:2023-08-18 00:30 IST

ஆவணி மாத ராசி பலன்கள் 18-08-2023 முதல் 17-09-2023 வரை

உழைப்பின் மூலமாக உயர்வை எட்டும் மேஷ ராசி நேயர்களே!

ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தைப் பார்க்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் 5 கிரகங்கள் சேர்க்கை பெற்றிருக்கின்றன. கூட்டுக்கிரக யோகம் இருப்பதோடு, 'புத ஆதித்ய யோகம்', 'சந்திர மங்கல யோகம்', 'புத சுக்ர யோகம்', 'குரு மங்கல யோகம்' ஆகிய யோகங்களும் இருப்பதால், உங்களின் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.

கடக - சுக்ரன்

ஆவணி மாதம் 1-ந் தேதி முதல், கடக ராசிக்கு சுக்ரன் வக்ரமாகி செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றைக் குறிக்கும் இடத்திற்கு அதிபதி சுக்ரன் என்பதால், அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. புதிய முயற்சிகளில் ஒன்றிரண்டு தாமதப்படும். அதிக ஆதாயம் கிடைக்கும் என்று நினைத்த தொழிலில், ஆதாயம் குறைவாகவே கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாமல் போகலாம். கோபத்தால் சில நல்ல வாய்ப்புகளை இழப்பீர்கள்.

கன்னி - செவ்வாய்

ஆவணி 2 -ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். 'கன்னி செவ்வாய் கடலும் வற்றும்' என்பது பழமொழி. உங்கள் ராசியைப் பொறுத்தவரை ராசிநாதன் செவ்வாய் 6-ம் இடத்திற்கு வருகிறார். 8-ம் இடத்திற்கு அதிபதியான செவ்வாய், 6-ம் இடத்திற்கு வருவது ஒரு வகையில் நன்மைதான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப, சில நல்ல காரியங்களும் இப்பொழுது நடைபெறும். ஆதாயம் தரும் விதத்தில் பயணங்கள் அமையும். ஒரு சிலருக்கு இடமாற்றமும் ஏற்படலாம்.

மகர - சனி

சனி பகவான் ஆவணி 7-ந் தேதி, வக்ர இயக்கத்தில் மகர ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியான சனி, இதுவரை லாப ஸ்தானத்தில் வக்ரம் பெற்று சஞ்சரித்தார். இனித் தொழில் ஸ்தானத்தில் வக்ரம் பெற்று சஞ்சரிக்கப் போகிறார். எனவே தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் உங்களிடமே திரும்பிவரும். பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தராது. வியாபாரப் போட்டிகளை சமாளிக்க புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள்.

புதன் வக்ர நிவர்த்தி

சிம்மத்தில் வக்ர நிலையில் சஞ்சரிக்கும் புதன், ஆவணி 15-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், வக்ர நிவர்த்தியாவதால் உடன்பிறப்புகளின் வழியில் சுமுகமான பேச்சுவார்த்தை உருவாகும். உத்தியோகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள், மீண்டும் பணியில் சேர்வதற்கான வாய்ப்புகள் அமையும். பொருளாதாரத்தில் இருந்த பற்றாக்குறை அகலும். வராத பாக்கிகள் வசூலாகும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ், கீர்த்தி மேலோங்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு, போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், எதிலும் அவசர முடிவு எடுக்க வேண்டாம். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்தாலும் உபயோகப்படுத்திக் கொள்ள இயலாது. மாணவ - மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கும் காலம் என்பதால் கவனம் தேவை. பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை குறையாமல் இருக்க விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஆகஸ்டு: 26, 27, 31, செப்டம்பர்: 6, 7, 11, 12.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

மேலும் செய்திகள்