மார்கழி மாத ராசி பலன்கள் 16-12-2022 முதல் 14-01-2023 வரை
சோதனைகளை சாதனைகளாக மாற்றிக் காட்டும் மேஷ ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசியில் ராகுவும், 7-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். ராசிநாதன் செவ்வாய் வக்ரம் பெற்று 2-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். எனவே அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் குறைவாக கிடைக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பது அரிது. உறவினர்களுக்காகவும், நண்பர்களுக்காகவும் பாடுபடும் சூழ்நிலை உருவாகும். செவ்வாய் வக்ர நிவர்த்தி வரை பொறுமையாக செயல்படுவது நல்லது.
புதன் வக்ர இயக்கம்
மார்கழி 3-ந் தேதி, தனுசு ராசியில் புதன் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். சகோதர சகாய ஸ்தானம் மற்றும் எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றைக் குறிக்கும் இடத்திற்கும் அதிபதியான அவர், வக்ரம் பெற்று வலிமை இழக்கும் பொழுது உடன்பிறப்புகளின் வழியே சலசலப்பு ஏற்படும். பாகப்பிரிவினை சம்பந்தமாக நடைபெற்ற பஞ்சாயத்துக்கள் தள்ளிப்போகலாம். உத்தியோகம் மற்றும் தொழிலில் குறுக்கீடுகள் அதிகரிக்கும். உங்களுக்கு வரவேண்டிய பதவி உயர்வு, சகப் பணியாளர் ஒருவருக்கு சென்றடையலாம். ஆரோக்கியத் தொல்லை குறையும். மாற்று மருத்துவத்தின் மூலம் உடலை சீராக்கிக் கொள்வது நல்லது. மாமன், மைத்துனர் வழியில் உள்ள உறவில் விரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
மகர-சுக்ரன் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், மார்கழி 15-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். வாக்கு, தனம், குடும்பம், வாழ்க்கைத் துணை ஆகிய இடங்களைக் குறிக்கும் இடத்திற்கு அதிபதியான அவர், தொழில் ஸ்தானத்திற்கு வருவது யோகம்தான். எதிர்பார்த்தபடியே தொழிலில் லாபம் கிடைக்கும். பணநெருக்கடி அகலும். சென்ற மாதத்தில் நடைபெறாத சில காரியங்கள் தற்போது துரிதமாக நடைபெறும். குடும்பத்தில் 'மங்கல ஓசை கேட்கவில்லையே' என்ற கவலை அகலும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வாழ்க்கைத் துணைக்கு உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும்.
புதன் வக்ர நிவர்த்தி
மார்கழி 24-ந் தேதி, தனுசு ராசியில் சஞ்சரிக்கும் சகாய ஸ்தானாதிபதி புதன் வக்ர நிவர்த்தியாவதால் எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கும். குறிப்பாக வாங்கல் - கொடுக்கல்கள் ஒழுங்காகும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வர். சகப் பணியாளர்களுக்கு மத்தியில் உங்கள் கை மேலோங்கும். ரண சிகிச்சை செய்ய வேண்டுமென்று சொன்ன மருத்துவர்கள் கூட சாதாரண சிகிச்சையின் மூலமாகவே உங்கள் ஆரோக்கியம் சீராக வழிவகுத்துக் கொடுப்பர். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
செவ்வாய் வக்ர நிவர்த்தி
மார்கழி 29-ந் தேதி, ரிஷபத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ர நிவர்த்தியாகிறார். இக்காலம் இனிய காலமாக அமையும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து சில காரியங்களை முடிப்பீர்கள். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். செவ்வாய் உங்கள் ராசிநாதனாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர். அவர் பலம்பெறும் இந்த நேரத்தில் கேட்டது கிடைக்கும். நினைத்தது நிறைவேறும். பொருளாதார பற்றாக்குறை அகலும். இடம் வாங்குவது, பூமி வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். உடன்பிறப்புகளின் வழியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மாறும். மூத்த சகோதர வழியில் ஏற்பட்ட முரண்பாடான கருத்துக்கள் அகலும். பயணங்கள் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்கி பயணிக்க வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறும். மருத்துவச் செலவுகள் குறையும். மனக்குழப்பம் அகலும். நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்து முடிப்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு உண்டு.
இம்மாதம் செவ்வாய்க்கிழமை தோறும் வடக்கு நோக்கிய அம்பிகையை வழிபடுவது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- டிசம்பர்: 23, 24, 28, 29, ஜனவரி: 4, 5, 8, 9. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் தன ஸ்தானத்திலும், விரயாதிபதி வியாழன் விரய ஸ்தானத்திலும் இருப்பதால் தனவரவு தாராளமாக வந்தாலும் வந்த மறுநிமிடே செலவாகிவிடலாம். குடும்ப உறுப்பினர்களின் தேவையைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். தாய்வழி ஆதரவு உண்டு. உடன்பிறந்தவர்கள் கொடுத்து உதவி செய்வர். பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பணிபுரியும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைத்து உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வர்.