மேஷம் - தமிழ் மாத ஜோதிடம்

Update:2022-08-16 18:03 IST

ஆவணி மாத ராசி பலன்கள் 17-08-2022 முதல் 17-09-2022 வரை

சிந்தித்த கருத்துக்களை சந்தித்தவர்களிடம் எல்லாம் சொல்லி மகிழும் மேஷ ராசி நேயர்களே!

ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் தன ஸ்தானத்தில் இருப்பதால் தனவரவு திருப்திகரமாக இருக்கும்.

சிம்ம - சூரியன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான சூரியன், மாதம் முழுவதும் பூர்வ புண்ணிய ஸ்தானத்திலேயே இருக்கிறார். எனவே பிள்ளை களால் மேன்மை ஏற்படும். சகாய ஸ்தானாதிபதி புதன், சூரியனோடு இணைந்து சஞ்சரிப்பதால் 'புத ஆதித்ய யோகம்' ஏற்படுகிறது. எனவே கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெறுவீர்கள்.

கன்னி - புதன் சஞ்சாரம்

ஆவணி 8-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் புதன், அங்கு உச்சம் பெறுகிறார். எனவே தொழில், உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான உதவி கிடைக்கும். எதிரிகளின் பலம் குறையும். இதுவரை நீங்கள் செய்ய நினைத்தும் முடியாதுபோன காரியங்கள் ஒவ்வொன்றாக நடந்தேறும். 3-ம் இடத்திற்கும் அதிபதியாக புதன் விளங்குவதால் சகோதர உறவு மேம்படும். வழக்குகள் சாதகமாகும்.

வக்ர புதன் சஞ்சாரம்

ஆவணி 12-ந் தேதி, சிம்ம ராசிக்குச் செல்லும் புதன் அங்கு வக்ரமாக மாறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் வக்ரம் பெறுவது நன்மைதான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கு ஏற்ப, திடீர் திருப்பங்கள் ஏற்படும். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். தொழில் கூட்டாளிகளில் ஒருசிலர் விலகினாலும் புதியவர்கள் வந்திணைந்து பொருளாதார நிலை உயர வழிவகுத்துக் கொடுப்பர்.

சிம்ம - சுக்ரன் சஞ்சாரம்

ஆவணி 16-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், பஞ்சம ஸ்தானத்திற்கு வருவது யோகம்தான். பிள்ளைகளுக்கு உத்தியோகம் கிடைக்கும். பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகளில் இருந்து வந்த தடை அகலும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. சுபகாரியங்கள் நடத்தும் வாய்ப்பு உருவாகும்.

குரு வக்ரமும், சனி வக்ரமும்

இந்த மாதம் முழுவதும் குருவும், சனியும் வக்ர இயக்கத்தில் உள்ளனர். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், குரு. அவரது வக்ர காலத்தில் தந்தை வழி உறவில் விரிசல் ஏற்படும். பயணங்கள் அதிகரிக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், சனி பகவான். அவரது வக்ரத்தால் இந்த காலகட்டத்தில் தொழிலில் சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். எண்ணங்கள் எளிதில் நடைபெற இறை வழிபாடு அவசியம்.

இம்மாதம் செவ்வாய்க்கிழமை தோறும் வராஹி அம்மனை வழிபட்டால் வளர்ச்சி கூடும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஆகஸ்டு: 20, 25, 26, செப்டம்பர்: 5, 6, 10, 11, 16, 17

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் பொருளாதார நிலை உயரும். புதிய பாதை புலப்படும். கணவன் - மனைவிக்குள் கனிவு உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு வேலை, மாலை இரண்டும் கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைத்தாலும் சனியின் வக்ர காலத்தில் சகப் பணியாளர்களால் சில தொல்லைகளைச் சந்திக்க நேரிடும். எதையும் நிதானமாகச் செய்யுங்கள்.

மேலும் செய்திகள்