மேஷம் - தமிழ் மாத ஜோதிடம்

Update:2022-07-16 21:47 IST

ஆடி மாத ராசி பலன்கள் 17-07-2022 முதல் 16-08-2022 வரை

உழைப்பதன் மூலமே உன்னத வாழ்வை அடையலாம் என்று சொல்லும் மேஷ ராசி நேயர்களே!

ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியிலேயே பலம்பெற்று சஞ்சரிப்பது யோகம்தான். பொருளாதார நிலை உயரும்.

சிம்ம - புதன் சஞ்சாரம்

ஆடி 13-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். எனவே சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்களும், ஊதிய உயர்வும் உண்டு. பணி நிரந்தரமாகும் வாய்ப்பு சிலருக்கு வாய்க்கும். பாகப்பிரிவினைகளில் இருந்த தடைகள் அகலும். இனிய பலன்கள் நிறைய நடைபெறும் நேரம் இது.

கடக - சுக்ரன் சஞ்சாரம்

ஆடி 22-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது, வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. ஒரு சிலர் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயதொழில் தொடங்குவர். தனவரவு திருப்தி தரும். நிதிப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சி வெற்றியாகும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்துசேரும். பாதியில் நின்ற பணிகள் துரிதமாக நடைபெறும்.

குரு வக்ர இயக்கம்

ஆடி 23-ந் தேதி, குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசி அடிப்படையில் பார்க்கும் பொழுது 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெறும் பொழுது நன்மை, தீமை இரண்டும் கலந்தே நடைபெறும். 12-க்கு அதிபதியாக குரு இருக்கிறார். விரயாதிபதி வக்ரம் பெறும் நேரம் விரயங்கள் குறையும். இந்த காலகட்டத்தில் சுபகாரியங்கள் நடத்துவதில் கவனம் செலுத்தலாம். 9-ம் இடத்திற்கும் குரு அதிபதி. அந்த வகையில் இந்த வக்ர காலத்தில் தந்தை வழி உறவில் விரிசல்கள் ஏற்படலாம். சொத்துக்களில் முறையான பங்கீடு கிடைப்பது அரிது. வாகன பழுது வாட்டத்தைக் கொடுக்கும். உடல் நலத்தில் அச்சுறுத்தல் உருவாகும். இடமாற்றம், வீடு மாற்றம் ஏற்படலாம்.

ரிஷப - செவ்வாய் சஞ்சாரம்

ஆடி 25-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிநாதன் தன ஸ்தானத்திற்கு வரும்போது பொருளாதார நிலை உயரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அருளாளர்கள் மற்றும் அனுபவஸ்தர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கைகொடுக்கும். என்றைக்கோ வாங்கிப் போட்ட இடம் பலமடங்கு விலை உயர்ந்து மகிழ்ச்சிப்படுத்தும். கடன்சுமை குறையும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி நீங்கள் தீட்டிய திட்டங்கள் நடைபெறும். தொழிலை விரிவுபடுத்தச் செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

இம்மாதம் செவ்வாய்க்கிழமை தோறும் அம்பிகையை வழிபட்டு வருவதன் மூலம் இன்பங்கள் இல்லம் தேடி வரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூலை: 17, 18, 23, 24, 28, 29, ஆகஸ்டு: 9, 10, 13, 14மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் ஆரோக்கியம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். இல்லம் கட்டிக் குடியேறும் எண்ணம் நிறைவேறும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி நீங்கள் எடுத்த முயற்சியில் வெற்றி உண்டு. ஆபரண சேர்க்கை திருப்தி தரும். சுபச்செய்திகள் வந்துசேரும். பணிபுரியும் பெண்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

மேலும் செய்திகள்