நாடாளுமன்ற தேர்தல் முடிவின் தொடர்ச்சியா?

13 தொகுதிகளில் ‘இந்தியா’ கூட்டணி 10 இடங்களிலும், பா ஜனதா 2 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.

Update: 2024-07-26 00:39 GMT

சென்னை,

கடந்த 2014, 2019 நாடாளுமன்ற தேர்தல்களில் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்த பா ஜனதா நடந்து முடிந்த தேர்தலில் 543 இடங்களில், தனியாக 370 இடங்களில் வெற்றிபெறுவோம், பா ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும் என்று பிரதமர் நரேந்திரமோடி மட்டுமல்ல, அமித்ஷா உள்பட அனைத்து பா ஜனதா தலைவர்களும் முழங்கினர். ஆனால் ஜூன் 4-ம் தேதி வந்த தேர்தல் முடிவு அதற்கு நேர்மாறாக இருந்தது. தேசிய ஜனநாயகக்கூட்டணி 293 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று பெரிய சறுக்கலை சந்தித்தது. அதில் பா ஜனதா 240 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறாமல் இருந்த காங்கிரஸ் கட்சி தனியாக 99 இடங்களிலும், 'இந்தியா' கூட்டணி 235 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. இந்த தேர்தல் முடிவு வந்து 40 நாட்களில், 7 மாநிலங்களில் 13 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. மேற்குவங்காளத்தில் 4 தொகுதிகளிலும், இமாசலபிரதேசத்தில் 3 தொகுதிகளிலும், உத்தரகாண்டில் 2 தொகுதிகளிலும், மத்தியபிரதேசம், தமிழ்நாடு, பஞ்சாப், பீகார் ஆகிய 4 மாநிலங்களில் தலா ஒரு தொகுதிகளிலும் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் எப்படியும் வெற்றிக்கொடி நாட்டவேண்டும் என்று பா ஜனதாவும், 'இந்தியா' கூட்டணியும் கங்கணம் கட்டிக்கொட்டு களத்தில் இறங்கின. ஆனால் தேர்தல்முடிவுகள் 'இந்தியா' கூட்டணிக்கு சாதகமாகவே அமைந்தது. மொத்தம் 13 தொகுதிகளில் 'இந்தியா' கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் தலா 4 இடங்களிலும், ஆம்ஆத்மி, தி மு க ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்திலும் என 10 இடங்களிலும், பா ஜனதா 2 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. இதுதவிர பீகாரில் சுயேச்சை வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றுள்ளார்.

இமாசலபிரதேசத்தில் காங்கிரஸ் பெற்ற வெற்றிதான் அங்கு முத்திரை பதித்தது. அங்கு காங்கிரசுக்கு ஆதரவளித்த 3 சுயேச்சைகள் தங்கள் ஆதரவை திரும்பப்பெற்று பா ஜனதாவில் சேர்ந்தனர். அந்த 3 தொகுதிகளிலும் நடந்த தேர்தலில் 2 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், முதல்-மந்திரியின் மனைவியும் அமோக வெற்றிபெற்றார். உத்தரகாண்டில் காங்கிரஸ் எம் எல் ஏ, பா ஜனதாவுக்கு தாவியதால் நடந்த தேர்தலிலும் மீண்டும் காங்கிரசே வெற்றிபெற்றது. மேற்குவங்காளத்தில் நிலைமையே வேறுவிதமாக இருந்தது. அங்கு 4 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், 3 தொகுதிகளில் ஏற்கனவே எம் எல் ஏக்களாக இருந்த பா ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள், திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்ததாலும், ஒரு திரிணாமுல் காங்கிரஸ் எம் எல் ஏ மரணமடைந்ததாலும், 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. இந்த 4 தொகுதிகளையுமே திரிணாமுல் காங்கிரஸ் வாரிசுருட்டிவிட்டது. தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி தொகுதியில் தி மு க வேட்பாளர், பா ஜனதா கூட்டணியில் போட்டியிட்ட பா ம க வேட்பாளரை தோற்கடித்து பெரும் வெற்றியை பெற்றார்.

இது பா ஜனதாவுக்கு பெரும் பின்னடைவு. 40 நாட்களுக்கு முன்பு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்த 13 தொகுதிகளில் உள்ள 11 தொகுதிகளில் 50 சதவீத வாக்குகளைப் பெற்ற பா ஜனதா, இப்போது சராசரியாக 35 சதவீத வாக்குகளைத்தான் பெற்றிருக்கிறது. அடுத்த சில மாதங்களில் ஜம்முகாஷ்மீர், மராட்டியம், அரியானா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் சூழ்நிலையில் இந்த 13 சட்டசபைக்கான இடைத்தேர்தல்கள் 'டிரெய்லராக' இருக்குமா? அல்லது அங்கு வேறுவிதமாக இருக்குமா? என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும் இப்போது.

Tags:    

மேலும் செய்திகள்