
இந்திய மாநிலங்களில் சத்தீஷ்கார் நக்சலைட்டுகளின் ஆதிக்கத்தால் பெரும் சிக்கல்களை சந்தித்து வந்தது. அங்குள்ள காடுகளும், மலைகளும் அவர்களின் அட்டகாசத்துக்கு பெரும் உதவியாக அமைந்தன. எப்படியாவது நக்சலைட்டுகளை அடக்கி ஒடுக்கிவிடவேண்டும் என்று மத்திய அரசாங்கம் மிகத்தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துவந்தது. இந்த பணியில் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது அங்கு பணியாற்றும் தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் ஐ.எப்.எஸ். அதிகாரிகள்தான். சத்தீஷ்காரில் பஸ்தர் சரகம் 6 மாவட்டங்களை உள்ளடக்கியது. பரந்து விரிந்த இந்த பகுதி முழுவதும் நக்சலைட்டுகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அங்குள்ள வனப்பகுதிகளில், அவர்களின் செயல்பாடுகள் கோரத்தாண்டவம் ஆடின. அந்த பகுதியை சேர்ந்த மக்களையும் தங்கள் பிடியில் வைத்திருந்தனர்.
மக்களிடம் வரி வசூலிப்பதும் இந்த நக்சலைட்டுகள்தான். அரசாங்கம் தங்களுக்காக என்ன திட்டங்களை செயல்படுத்துகிறார்கள் என்பதுகூட, மக்களுக்கு தெரியாத நிலையில் வைத்திருந்தனர். இந்தநிலையில், நக்சலைட்டுகளை ஒடுக்க துணிச்சலாகவும், அதேநேரத்தில் சாதுர்யமாகவும் பணியாற்றக்கூடிய அதிகாரிகளை தேர்வு செய்யவேண்டும் என்று அரசு கருதியது. அப்போதுதான் அதாவது, 2005-ம் ஆண்டில் துடிப்புமிக்க இளம் ஐ.பி.எஸ். அதிகாரியான கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்த சுந்தரராஜை நக்சலைட்டுகளின் கோட்டையான பஸ்தர் உதவி போலீஸ் சூப்பிரண்டாக அரசு நியமித்தது. போலீஸ் அதிகாரிகளின் அதிரடிக்கு துணையாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் வேண்டுமல்லவா? அதற்கு வலுசேர்க்கும் வகையில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அன்பழகனும், அவரது மனைவியான கோவையை சேர்ந்த அலர்மேல்மங்கையும் அந்த சரகத்தில் மாவட்ட கலெக்டர்களாக நியமிக்கப்பட்டனர்.
சுந்தரராஜூவுக்கு அன்று தொடங்கிய பயணம் அதே சரகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, டி.ஐ.ஜி. இப்போது ஐ.ஜி. என படிப்படியாக பதவி உயர்வை கொடுத்து அழகு பார்த்தது அரசு. பெரிய ராணுவத்தைபோல எப்போதும் நவீன துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், இரவில் பார்க்கக்கூடிய பைனாகுலர், கண்ணி வெடிகளை வைத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்திவந்த நக்சலைட்டுகளை ஒழிக்க சுந்தரராஜ் மிகவும் நுட்பமான திட்டமிடுதல் மூலம் பல என்கவுண்ட்டர்களை நடத்தினார். இதனால் நக்சலைட்டுகளுக்கு சிம்ம சொப்பனமாகவே திகழ்ந்தார்.
கடந்தவாரம் வியாழக்கிழமையன்று ஒரேநேரத்தில் போலீஸ் படைகளுடன் பஸ்தர் சரகத்தில் உள்ள பிஜாப்பூர் மற்றும் கான்கேர் மாவட்டத்தில் நக்சலைட்டுகளை சுற்றிவளைத்து என்கவுண்ட்டர் செய்ய சுந்தரராஜ் திட்டமிட்டிருந்தார். அதன்படி பல மணி நேரம் நடத்தப்பட்ட வேட்டையில் 30 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இதில் ஒரு போலீஸ்காரரும் வீரமரணம் அடைந்தார். நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்ட தைரியமான செயலை பாராட்டிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் இந்தியா நக்சலைட்டுகள் இல்லாத நாடாகிவிடும் என்ற தன்னம்பிக்கையை தெரிவித்துள்ளார்.
பஸ்தர் சரகத்தில் முன்பு பல ஆயிரக்கணக்கானோர் நக்சலைட்டுகள் இயக்கத்தில் இருந்தனர். இது 4 ஆயிரமாக குறைக்கப்பட்டு, இப்போது 1,200 பேர் மட்டுமே இருக்கிறார்கள். அவர்களிலும் 400 பேர் தான் ஆயுதம் ஏந்தும் நக்சலைட்டுகள். மீதம் உள்ளவர்கள் அவர்களுக்கு ஏவல் பணி செய்யும் உதவியாளர்கள்தான். சத்தீஷ்காரில் அன்பழகன், அலர்மேல்மங்கையுடன் கவர்னரின் செயலாளராக இருக்கும் சி.ஆர்.பிரசன்னா, பாரதிதாசன், பிரகாஷ், ஆர்.சங்கீதா, தேவசேனாபதி, ஆர்.பிரசன்னா உள்பட 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், வனத்துறையில் வெங்கடாசலம், அருண்பிரசாத், நாகர்கோவிலை சேர்ந்த மெர்சி பெல்லா, பஸ்தர் சரக மாவட்ட வன அதிகாரிகள் குருநாதன், சசிகானந்தன் ஆகிய ஐ.எப்.எஸ். அதிகாரிகளும் பணியாற்றுகிறார்கள். சத்தீஷ்கார் மாநிலத்தில் அமைதி திரும்பவும், வளர்ச்சிக்கும் தமிழக அதிகாரிகளின் அர்ப்பணிப்பும், பங்கும் மகத்தானது.