
தமிழ்நாட்டில் நாளுக்குநாள் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இப்போது 3 கோடியே 34 லட்சம் வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. சென்னையில் மட்டும் 72 லட்சம் வாகனங்கள் இருக்கின்றன. இதுதவிர வெளியூர்களிலிருந்து சென்னைக்கு தினமும் வந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையும் சில லட்சங்களை தாண்டும்.
தமிழகத்தில் நல்ல மார்க்கெட் இருப்பதை புரிந்துகொண்ட மோட்டார் வாகன நிறுவனங்களும் புது புது மாடல்களை அறிமுகப்படுத்துகின்றன. இப்போது கார் என்பது வசதிப்படைத்தவர்களின் வாகனம் என்ற நிலை மாறி, வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் கொடுப்பதாலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பெட்ரோல் அலவன்ஸ் தருவதாலும் நடுத்தர மக்களும் கார் வாங்கி விடுகிறார்கள்.
பெரும்பாலானோர் தினமும் காரை பயன்படுத்தாவிட்டாலும் வாரத்தில் ஓரிருநாட்கள் அதுவும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் குடும்பத்தோடு வெளியே செல்ல மட்டும் பயன்படுத்த தங்களுக்கு சொந்தமாக இருக்கட்டுமே என்று கார் வாங்கி விடுகிறார்கள். இத்தகையவர்கள் 'டிரைவிங்' தெரியாவிட்டாலும் காரை வெளியே எடுத்துச்செல்வதற்காக அந்தநாளில் மட்டும் 'ஆக்டிங்' டிரைவர்களை வரவழைத்துக்கொள்கிறார்கள்.
எல்லா ஊரிலும் இப்போது ஆக்டிங் டிரைவர்கள் நிறைய பேர் வந்துவிட்டார்கள். எனவே கார்களின் எண்ணிக்கையும் பெருகிவிட்டன. ஆனால் சென்னை உள்ளிட்ட நகர்புறங்களில் கார்களை வீட்டுக்குள் நிறுத்த இடமில்லாமல், வீட்டுக்கு வெளியேதான் நிறுத்திவைக்கிறார்கள். சாலைகளின் இருபுறமும் இப்படி கார்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு கடும் சிரமம் ஏற்படுகிறது.
ஏற்கனவே சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம், குடியிருப்புகளின் எண்ணிக்கைக்கேற்ப வாகன நிறுத்துமிடங்களை ஏற்படுத்தவேண்டும் என்ற அடிப்படையில் கட்டிட வரைப்பட அனுமதிகளை வழங்குகிறது. ஆனால் ஒரு வீட்டில் ஒரு காருக்கு பதில் பல கார்கள் வைத்திருப்பதால் வாகன நிறுத்துமிடங்கள் போதுமானதாக இருப்பதில்லை.
குறிப்பாக சென்னையில் அதிக போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதற்கு காரணம், அனைத்துச் சாலைகளின் இருபக்கங்களிலும் கார்களை நிறுத்திவைப்பதால்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மையாகும். இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ''கும்டா'' என்று அழைக்கப்படுகிற சென்னை ஒருங்கிணைந்த பெருநகர ஆணையம் அரசுக்கு சில பரிந்துரைகளை அளித்துள்ளது.
தனிநபர் ஒரு வாகனத்தை பதிவுசெய்யும்போது அந்த வாகனத்தை சாலை உள்பட பொதுஇடங்களில் நிறுத்தாமல் எந்த வாகன நிறுத்தத்தில் நிறுத்தப்படும் என்பதற்கான ஆதாரத்தை அளிக்கவேண்டும். வீட்டில் ''கார்ஷெட்'' இல்லாதவர்களுக்காக தனியார்கள் பொது கார் நிறுத்துமிடங்களை உருவாக்கி அதனை வாடகை அல்லது குத்தகைக்கு விடலாம். 100 பேருக்கு மேல் பணிபுரியும் நிறுவனங்களில் ஊழியர்கள் தனித்தனி வாகனங்களில் வந்து செல்வதை தவிர்த்து பொதுபோக்குவரத்தை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.
எந்த இடங்களிலெல்லாம் வாகன நிறுத்துமிடங்கள் இருக்கிறது, அதில் வாகனங்களை இப்போது நிறுத்தலாமா? என்பதனை ஆன்லைன் மூலம் தெரிந்துகொள்ள வசதி ஏற்படுத்தவேண்டும், ஆங்காங்கு காலியாக இருக்கும் அரசு நிலங்களை பொதுவாகன நிறுத்தும் இடமாக பயன்படுத்த தனியாருக்கு குத்தகைக்கு விடலாம். இப்படி சில பரிந்துரைகளை கும்டா, அரசுக்கு அளித்துள்ளது.
இந்த பரிந்துரைகள் மிகவும் வரவேற்கத்தக்கதாகும். அரசு இந்த பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு இந்த நடைமுறைகளை முதலில் சென்னையிலும், தொடர்ந்து அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுத்தால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தமுடியும், வாகனங்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும். எனவே இதை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.