விண்வெளியில் இருந்து இந்தியா எப்படி காட்சியளிக்கிறது?
நாங்கள் இமயமலையை சுற்றி வரும்போது அழகிய அபாரமான படங்களை எடுத்தோம் என்று சுனிதா வில்லியம்ஸ் கூறியுள்ளார்.;

விண்வெளியில் 8 நாட்கள் செலவழிக்கவேண்டும் என்ற திட்டத்துடன் சென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோர் விண்கலனில் ஏற்பட்ட கோளாறினால் பூமிக்கு திரும்பமுடியாமல் ஏறத்தாழ 9 மாதங்கள் விண்வெளி நிலையத்திலேயே சுற்றிவந்து தங்களது துணிச்சலை பறை சாற்றினார்கள். அங்கு தரையில் கால் பதிக்கமுடியாத நிலையில் பல் துலக்குவது எப்படி? தூங்குவது எப்படி? என்பது உள்பட தன் அன்றாட வாழ்க்கையையெல்லாம் வீடியோ எடுத்து பூமிக்கு அனுப்பினார் சுனிதா வில்லியம்ஸ். விண்வெளியிலேயே வாழ்க்கையை கழித்த அவர்கள் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 'பால்கான் 9' என்ற விண்கலம் மூலம் கடந்த மார்ச் மாதம் 18-ந்தேதி பூமிக்கு திரும்பினார்கள். மெய்சிலிர்க்க வைத்த இந்த காட்சிகளை பார்த்தபோது உலகம் முழுவதிலும் குறிப்பாக இந்தியர்கள் மனது பக்...பக்... என்று அடித்துக்கொண்டிருந்தது.
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பியதை அவருடைய பூர்வீகமான குஜராத்தில் உள்ள சொந்த ஊரில் அனைவரும் ஆடிப்பாடி, பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். விண்வெளியில் இருந்த அவரது உடல்நிலை இயல்பு நிலைக்கு வர ஏறத்தாழ 10 நாட்கள் ஆனது. அதன்பிறகு முதல் முறையாக பேட்டி கொடுத்தார். 1984-ம் ஆண்டு முதலாவதாக விண்வெளிக்கு சென்று திரும்பிய ராகேஷ் சர்மாவிடம், அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி விண்ணில் இருந்து பார்ப்பதற்கு இந்தியா எப்படி இருந்தது? என்று கேட்டார். அதற்கு ராகேஷ் சர்மா, முகமது இக்பாலின் கவிதையான 'சாரே ஜஹான் சே அச்சா' என்று இந்தியில் பதில் அளித்தார். இதற்கு அனைத்து இடங்களையும்விட (இந்தியாவே) சிறப்பானது என்று பொருள். இப்போது 40 ஆண்டுகளுக்கு பிறகு இதே கேள்வியை சுனிதா வில்லியம்சிடமும் நிருபர் கேட்டபோது, அவர் ஒரு வினாடி கூட தாமதிக்காமல் 'இந்தியா ரொம்ப அற்புதமாக இருந்தது' என்று உணர்ச்சிகரமாக பதில் அளித்தார்.
மேலும் அவர், 'ஒவ்வொரு முறையும் நாங்கள் இமயமலையை சுற்றி வரும்போது அழகிய அபாரமான படங்களை எடுத்தோம். ஒரு நீர்க்குமிழி இமயமலையில் இருந்து இந்தியாவுக்குள் பாய்ந்து வருவதுபோல இருந்தது. இது பல வண்ணங்களில் இருந்தது. கிழக்கே இருந்து குஜராத் மற்றும் மும்பையை நோக்கி செல்லும்போது அந்த கடல் பகுதியில் மீன்பிடி படகுகள் செல்வதை பார்க்க முடிந்தது' என்று சொல்லிவிட்டு, 'அது ஒரு கலங்கரை விளக்கம் போல இருந்தது' என்று தொடங்கி இந்தியாவை பற்றி மிகவும் உணர்வுப்பூர்வமாக விவரித்தார்.
இந்தியாவுக்கு சென்று இஸ்ரோவின் விண்வெளி திட்டத்துக்கு உதவி செய்வீர்களா? என்று கேட்டதற்கு, 'நான் இதை எதிர்பார்க்கிறேன். இது சாத்தியமானால் என்னுடைய அனுபவத்தை இந்தியாவில் பலருடன் பகிர்ந்து கொள்வேன். ஏனெனில் இந்தியா ஒரு தலைசிறந்த நாடு. மேலும் சிறந்த ஜனநாயக நாடு. விண்வெளியில் கால்தடம் பதிக்க முயற்சி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது. அந்த முயற்சியில் நானும் பங்குவகிக்க விரும்புகிறேன். விண்வெளியில் இருந்து திரும்பியவுடன் முதலில் பாலாடை கட்டி தடவிய சாண்ட்விச்சை சாப்பிடும்போது சுத்த சைவரான என்னுடைய தந்தையை நினைத்தேன்' என்றார். ஆக விண்வெளியில் இருக்கும்போதும் சரி. பூமிக்கு திரும்பி வந்த பிறகும் சரி இந்தியாவையே தன் நினைவலைகளில் வைத்து இருக்கும் சுனிதாவை பற்றி இந்தியா பெருமை கொள்கிறது.