மாநில பட்டியலில் கல்வி
அரசியல் சட்டம் எழுதப்பட்டபோது கல்வி மாநில பட்டியலின் கீழ்தான் இருந்தது.;
இந்தியா சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகளாகின்றது. பல மொழிகள், இனங்கள், பண்பாடுகள், பழக்க வழக்கங்களை கொண்டுள்ள நமது நாட்டில் இப்போது மொத்தம் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனி, தனி கலாசாரங்கள் இருக்கின்றன. அதனால்தான் நமது அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் போன்ற மேதைகள் நம் நாட்டை ஒற்றை தன்மை கொண்ட நாடாக இல்லாமல் கூட்டாட்சி கருத்தியலை, நெறிமுறைகளை கொண்ட மாநிலங்கள் அடங்கிய ஒன்றியமாக உருவாக்கினார்கள்.
அரசியலமைப்பு சட்டத்திலேயே இந்தியாவை மாநிலங்கள் அடங்கிய ஒன்றியம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால்தான் அரசியலமைப்பு சட்டத்தில் மாநிலங்களின் அதிகாரத்தின் கீழ் உள்ள துறைகளை மாநில பட்டியலின் கீழும், மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள துறைகளை மத்திய பட்டியலின் கீழும், மத்திய-மாநில அரசுகள் இரண்டும் சேர்ந்து கவனிக்கவேண்டிய துறைகளை பொதுப்பட்டியலின் கீழும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில், அரசியல் சட்டம் எழுதப்பட்டபோது கல்வி மாநில பட்டியலின் கீழ்தான் இருந்தது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழி பேசிக்கொண்டு இருக்கும் சூழ்நிலையில், அந்தந்த தாய்மொழியில் கல்வி கற்பிக்கப்படும்போது கல்வி மாநில பட்டியலின் கீழ் இருப்பதே சாலச்சிறந்தது என்று அரசியல் சட்ட மேதைகள் கருதியதால்தான் ஆரம்பத்தில் இருந்து கல்வி மாநில பட்டியலில் இருந்தது.
எந்த பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக போய்க்கொண்டு இருந்த நிலையில் 1976-ம் ஆண்டு இந்திரா காந்தியால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட நேரத்தில் இந்திய அரசியல் சட்டத்தின் 246-வது பிரிவின் 7-வது அட்டவணையில் மாநில பட்டியலில் இருந்த கல்வியை பொதுப்பட்டியலுக்கு கொண்டுவரும் முயற்சி எடுக்கப்பட்டது. இதற்காக அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டு கல்வி மாநில பட்டியலில் இருந்து எடுக்கப்பட்டு, பொதுப்பட்டியலுக்கு கொண்டுவரப்பட்டது. அப்போதே தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு குரல் எழுப்பினாலும் நெருக்கடி நிலை அமலில் இருந்ததால் அது பெரிய அளவில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
கல்வி பொதுப்பட்டியலில் உள்ள காரணத்தால்தான் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலமாக நடக்கவேண்டும் என்ற முறையை மத்திய அரசாங்கத்தால் கொண்டுவர முடிந்தது. பொதுப்பட்டியலில் கல்வி இருப்பதால் தேசிய கல்விக்கொள்கையின் கீழ் வரும் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் 'சமக்ர சிக்ஷா அபியான்' திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய சுமார் ரூ.2 ஆயிரத்து 500 கோடியை விடுவிப்போம் என்று மத்திய அரசாங்கத்தால் சொல்ல முடிகிறது. இந்தநிலையில், தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மொழி, இன, பண்பாடு ஆகியவற்றின் தனித்தன்மைகளை உறுதி செய்யும் வண்ணம் கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்கவேண்டியது இன்றியமையாததாகும் என்று கூறியிருப்பதை மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது தமிழ்நாட்டின் கோரிக்கையாகும். இது தமிழ்நாடு மட்டுமல்ல பல மாநிலங்களின் நீண்டகால கோரிக்கையாகவும் இருக்கிறது. இதுபோல மாநில பட்டியலில் உள்ள முக்கிய அதிகாரங்களான மருத்துவம், சட்டம், நீதி ஆகியவற்றையும் பொதுப்பட்டியலுக்கு மடை மாற்றம் செய்யும் பணிகள் மத்திய அரசாங்கத்தால் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு சந்தேகத்தை கிளப்பியுள்ளார். இப்படி மாநில அரசின் அதிகாரங்களை ஒவ்வொன்றாக மத்திய அரசாங்கம் எடுத்துக்கொள்ளகூடாது என்பது பொதுவான கோரிக்கையாக இருக்கிறது.