இலவசங்கள் சோம்பேறிகளாக்கி விடக்கூடாது

தேர்தல் அறிக்கைகளில் இலவசங்கள் பற்றிய வாக்குறுதிகளே பிரதானமாக இடம் பெறுகின்றன.;

Update:2025-04-14 03:45 IST
இலவசங்கள் சோம்பேறிகளாக்கி விடக்கூடாது

நாட்டில் தீர்வு காணமுடியாத பல செயல்களுக்கு நல்ல தீர்வை காட்டுவதோடு மட்டுமல்லாமல், பல விஷயங்களில் செல்லவேண்டிய சரியான பாதைகளை அரசுகளுக்கும், மக்களுக்கும் சுப்ரீம் கோர்ட்டுதான் காட்டுகிறது. நீண்ட நெடுநாட்களாக பொருளாதார நிபுணர்களும், நாடு முன்னேறவேண்டும் என்ற லட்சியம் கொண்ட மக்களும் பேசிக்கொண்டிருந்த உழைப்பின் மகத்துவத்தை பற்றி சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் நல்ல ஆலோசனைகளின் மூலமாக வழங்கியுள்ளது. அனைத்து கட்சிகளும் இலவசங்களை வாரி, வாரி வழங்குவதன் மூலமாகத்தான் வாக்குகளை மொத்தமாக அள்ளமுடியும் என்று கருதுகிறார்கள். இதனால் தேர்தல் அறிக்கைகளில் வளர்ச்சி பாதைகளுக்கும், வேலைவாய்ப்புகளை வழங்குவதற்குமான வாக்குறுதிகளை விட இலவசங்கள் பற்றிய வாக்குறுதிகளே பிரதானமாக இடம் பெறுகின்றன.

சமீபத்தில் நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் கூட அனைத்து கட்சிகளும் பெண்களுக்கு மாதந்தோறும் இலவச உதவித்தொகை வழங்குவோம் என்று ஆளுக்கொரு தொகையை தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தாலும், அதிக தொகையை அதாவது மாதம் ரூ.2,500 வழங்குவோம் என்று அறிவித்த பா.ஜனதாவே வெற்றி வாகை சூடி, ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கிறது. இதுபோலத்தான் மற்ற மாநிலங்களிலும் அரசுகள் இலவசங்களை அதிக அளவில் நிறைவேற்றி வளர்ச்சி திட்டங்கள், உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கமுடியாமல் தடுமாறுகின்றன. மக்களின் மனப்போக்கும் இலவசமாக எல்லாம் கிடைப்பதால் நாம் ஏன் வேலைக்கு போய் கஷ்டப்படவேண்டும்? என்று வந்துவிட்டது.

கிராமங்களில் அரசு கொடுத்த இலவச வீடு இருக்கிறது. இலவச அரிசி கிடைக்கிறது. மாதந்தோறும் உதவித்தொகை வருகிறது. இதுமட்டுமல்லாமல் 100 நாள் வேலை திட்டம் இருக்கிறது. நாம் ஏன் வியர்வை சிந்தி வேலை பார்க்கவேண்டும்? என்ற மனோபாவம் வந்துவிட்டதால் வேலை பார்க்க செல்லாமல் விவசாய வேலைகளுக்கு கூட ஆட்கள் கிடைக்காத நிலை இருக்கிறது. சீன தத்துவ மேதையான லா சூ, 'ஒரு மனிதனிடம் ஒரு மீனை கொடுத்தால் அந்த ஒரு நாளுக்கு மட்டும் அவனுக்கு உணவளிக்கமுடியும், அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக்கொடுத்தால் அவன் வாழ்நாள் முழுவதும் உணவளிக்கமுடியும்' என்று கூறியது இன்றைக்கும் பல அரசுகளுக்கு பாடமாக இருக்கிறது.

இந்த பின்னணியில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் கொண்ட அமர்வு ஒரு வழக்கை விசாரிக்கும்போது, 'துரதிஷ்டவசமாக தேர்தல் அறிக்கைகள் வரும்போது இலவசங்களுக்கான அறிவிப்புகளும் வந்துவிடுகிறது. எந்த வேலையும் செய்யாமல் மக்களுக்கு இலவச அரிசியும், பணமும் கிடைத்துவிடுவதால் அவர்கள் எந்த வேலைக்கும் செல்ல தயாராக இல்லை. எனது அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைப்பதில்லை. இலவசங்கள் மக்களை ஒட்டுண்ணிகளாக்கி விடுகிறது. இலவசங்கள் மக்களை வேலை பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தை போக்கிவிடுகிறது' என்ற கருத்தை ஆழமாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்கள். முதியோருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், ஆதரவற்றோருக்கும் அரசின் உதவி செல்வது நிச்சயமாக வரவேற்கத்தக்கது. ஆனால் உழைக்க திறன் உள்ள மக்களை சோம்பேறிகளாக்கி விடக்கூடாது. உழைப்பவர்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் எனக்குத்தான் இலவசமாக எல்லாம் கிடைக்கிறதே, நான் ஏன் வேலைக்கு செல்லவேண்டும்? என்ற எண்ணத்தை போக்கி சீனா போல ஆணுக்கும், பெண்ணுக்கும் உழைப்பதற்கு வசதியாக வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரவேண்டும். 'உழைப்போம் உயர்வோம்' என்ற முத்தான அறிவுரையை அனைவரின் மனதிலும் விதைக்கவேண்டும். 

Tags:    

மேலும் செய்திகள்