குறைந்து இருக்கிறது; ஆனால் போதாது
வாகன ஓட்டிகளுக்கு சாலை போக்குவரத்து விதிகள் குறித்து மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.;

சாலை போக்குவரத்து பாதுகாப்பாக இருந்தால்தான் பயணம் பாதுகாப்பானதாக இருக்கும். பாதுகாப்பான போக்குவரத்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான் கடந்த டிசம்பர் மாதம் சாலை போக்குவரத்து வாரம் கடைப்பிடிக்கப்பட்டது. தமிழ்நாட்டில்தான் விபத்துகளின் எண்ணிக்கை அதிகம், விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகம், காயம் அடைந்தோரின் எண்ணிக்கை அதிகம் என்ற நிலை கடந்த சில ஆண்டுகளாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு விபத்துகளில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை சற்றே குறைந்து இருக்கிறது. 2023-ம் ஆண்டில் 18 ஆயிரத்து 347 பேர் தமிழ்நாட்டில் நடந்த 17 ஆயிரத்து 526 விபத்துகளில் உயிரிழந்து இருந்த நிலையில், 2024-ல் 18 ஆயிரத்து 74 பேர் 17 ஆயிரத்து 282 விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.
மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையிலும், மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அபரிமிதமாக உயர்ந்துள்ள நிலையிலும், சாலைகளின் நீளம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறைந்து இருக்கிறது. ஆனாலும் மிக குறைந்த அளவிலேயே இது இருக்கிறது. 273 உயிரிழப்புகள்தான் குறைந்துள்ளது என்ற நிலையில் இது போதாது. இன்னும் குறையவேண்டும் என்றால் வாகன ஓட்டிகளுக்கு சாலை போக்குவரத்து விதிகள் குறித்து மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து வாகன ஓட்டிகள் உள்பட பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். ஏனெனில் வாகன ஓட்டிகளால் மட்டுமல்ல சாலைகளில் செல்லும், சாலைகளை கடக்கும் பொதுமக்களும் விபத்துகளுக்கு காரணமாக இருக்கிறார்கள்.
பெரும்பாலான விபத்துகளுக்கு டிரைவர்களின் கவனக்குறைவே காரணமாக இருக்கிறது. ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பில்லாதது என்ற வகையில் இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது மிக மிக அவசியமான தேவையாகிறது. முதலாவதாக தமிழ்நாடு முழுவதும் அடிக்கடி விபத்துகள் நடக்கும் இடங்கள் என்று கண்டறியப்பட்டுள்ள 6 ஆயிரத்து 165 இடங்களில் என்னென்ன காரணங்களால் இப்படி விபத்துகள் நடக்கிறது? என்பதை கண்டறிந்து அதை சரி செய்யவேண்டும். மது குடித்துவிட்டு வாகனங்களை யாரும் ஓட்டமுடியாது என்ற வகையில் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்படவேண்டும். நகரங்களிலும், கிராமங்களிலும் சாலைகளின் தரம் மேம்படுத்தப்படவேண்டும். கூடுமான வரையில் வளைவுகள் குறைக்கப்படவேண்டும். சாலை கட்டுமானங்களில் பாதுகாப்பு அம்சங்களை முக்கியமாக சேர்க்கும் நடைமுறையை செயல்படுத்தவேண்டும்.
சாலைகளில் கண்காணிப்பு முறைகளை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு கேமரா, வேக ரேடார்கள் போன்ற பல டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படவேண்டும். வாகன ஓட்டிகளுக்கு கண் பார்வைதான் மிகவும் அவசியம் என்று சென்னையில் நடந்த போக்குவரத்து விழிப்புணர்வு வாரத்தில் ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி.யும், லோக்பால் உறுப்பினருமான அர்ச்சனா ராமசுந்தரம் கூறியதோடு, அரசு போக்குவரத்துக்கழக டிரைவர்களுக்கு கண் பரிசோதனை முகாமையும் தொடங்கி வைத்தார்.
சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில், பெரும்பாலான 'டிரக்' டிரைவர்களுக்கு பார்வை குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை நாடாளுமன்றத்திலேயே மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியிருக்கிறார். சாலை விபத்துகளை இன்னும் அதிக அளவில் குறைக்கவேண்டும் என்ற உறுதிப்பாட்டை ஒவ்வொருவரும் எடுத்துக்கொண்டாலே விபத்துகள் தானாகவே குறைந்துவிடும். முக்கியமாக போக்குவரத்து போலீசார் சாலை விதிகள் மீறப்படாமல் இருப்பதை கண்காணிக்க தீவிரமாக பணியாற்றினாலே விபத்துகள் குறையும். விபத்துகள் குறைவது என்பது வாகன ஓட்டிகள், பொதுமக்கள், போக்குவரத்து போலீசார், நெடுஞ்சாலைத்துறை, மின்சார வாரியம் போன்ற அனைவரின் கூட்டு பொறுப்பில்தான் இருக்கிறது.