100 நாள் வேலை திட்டத்துக்கான நிதி பாக்கி

இந்த திட்டத்துக்கான நிதியை பாக்கி இல்லாமல் மத்திய அரசாங்கம் வழங்கவேண்டும்;

Update:2025-03-28 01:33 IST

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று கேள்வி நேரத்தின்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் எனப்படும் 100 நாள் வேலை திட்ட நிதி தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, தி.மு.க. உறுப்பினர் கனிமொழி ஒரு துணைக்கேள்வியை முன்வைத்தார். அப்போது அவர், 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படவேண்டிய ஊதியத்தை 15 நாட்கள் தாமதம் செய்தால் அதற்குண்டான வட்டியை சேர்த்து தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டும் என்பது இந்த திட்டத்தின் விதி. தமிழ்நாட்டில் உபகரணங்கள் ஊதியம் என்ற வகையில் சுமார் ரூ.4 ஆயிரத்து 34 கோடி கடந்த 5 மாதங்களாக நிலுவையில் உள்ளது. இதுகுறித்து எங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். நாங்களும் துறை மந்திரியை சந்தித்து, நிதியை விரைந்து வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தோம்.

நாங்கள் அந்த நிதிக்காக காத்திருக்கிறோம். எப்போது அதை விடுவிப்பீர்கள்?. ஏற்கனவே 5 மாதங்களாக பாக்கி இருக்கிறது. எனவே வட்டியும் சேர்த்து வழங்குவீர்களா? என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த, மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை மந்திரி சந்திரசேகர் பெம்மசனி இந்த திட்டம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட திட்டமாகும். இந்த திட்டத்தின் விதிகளின்படி 15 நாட்களுக்கு மேல் நிதி நிலுவையில் வைக்கப்பட்டு இருந்தால் 16-வது நாளில் இருந்து 0.05 சதவீதம் வட்டி வழங்கப்படவேண்டும். மேலும் நிதி தாமதமானால் முதலில் மாநில அரசு அந்த தொகையை செலுத்தவேண்டும். பிறகு அந்த தொகையை மத்திய அரசாங்கம் கொடுத்துவிடும் என்பதுதான் விதிகளில் கூறப்பட்டுள்ளது என்றார்.

இதற்கிடையே அதேநாளில் டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இந்த கோரிக்கை குறித்து பேசியதாக கூறியிருக்கிறார். 100 நாள் வேலை திட்ட பாக்கி மட்டுமல்லாமல், சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்துக்கான பாக்கி உள்பட மத்திய அரசாங்க திட்டங்களுக்காக கொடுக்கவேண்டிய பாக்கி தொகையையும் வழங்க கோரியதாக கூறியிருக்கிறார். ஆக மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் கேட்ட கேள்விக்கு, மந்திரி பதில் அளித்த சமயத்தில் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு துணை கேள்வி கேட்ட தி.மு.க. உறுப்பினர் கனிமொழியும், அதேநாளில் அமித்ஷாவை அரசியல் ரீதியாக சந்தித்தாலும், தமிழகத்தின் நலன் கருதி 100 நாள் வேலை திட்ட பாக்கி உள்பட அனைத்து திட்டங்களுக்கும் தரவேண்டிய நிதியை உடனே விடுவிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்த தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் பாராட்டுக்குரியவர்கள். இதுகுறித்து நாளை தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தி.மு.க. அறிவித்திருக்கிறது.

ஆனால் மத்திய அரசாங்கம் இந்த நிதியை கடந்த 5 மாதங்களாக தராததால், இந்த திட்டத்தின் கீழ் வேலை பார்த்தவர்களுக்கு சம்பளம் கொடுக்க நிதி இல்லாமல் தமிழக அரசும் தடுமாறுகிறது. இதனால் பல இடங்களில் வேலை பார்த்தவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால் அவர்களின் வாழ்வாதாரம் தடுமாற்றத்தில் இருக்கிறது. 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை பார்ப்பவர்கள் கிராமப்புறங்களில் உள்ள ஏழை-எளிய மக்கள். எனவே அவர்களுக்கு தொடர்ச்சியாக 100 நாட்கள் வேலையும், வேலை பார்த்த நாளன்றே ஊதியமும் கிடைக்கும் வகையில் இந்த திட்டத்துக்கான நிதியை பாக்கி இல்லாமல் மத்திய அரசாங்கம் வழங்கவேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்