குவிந்து கிடக்குது செயற்கை நுண்ணறிவில் வேலைவாய்ப்பு
உலகின் பல முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள தயாராக இருக்கிறார்கள்.;

கல்வி வளர்ச்சியில் மத்திய-மாநில அரசுகள் காட்டும் முனைப்புக்கு நிகராக வேலைவாய்ப்புகளையும் உருவாக்கவேண்டும். ஏனெனில் படித்து முடித்த இளைஞர்களெல்லாம் வேலைவாய்ப்பைத்தான் நாடுவார்கள். நாட்டின் வளர்ச்சியிலும் வேலைவாய்ப்பு அதிக பங்காற்றுகிறது. நம்மிடம் படித்த இளைஞர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அதுபோல வேலைவாய்ப்புகளும் ஏராளமாக இருக்கிறது. சமீபத்தில் கூட ஒரு முன்னணி தொழில் அதிபர் எங்களிடம் வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் நாங்கள் எதிர்பார்க்கும் திறமையுள்ள இளைஞர்கள் கிடைப்பதில்லை என்றார். ஆக இந்த காலத்தில் தனியார் தொழில் நிறுவனங்களிடம் வேலை வழங்கும்போது நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. அதற்கேற்றவகையில் வேலை தேடும் இளைஞர்கள் தங்களை தயார் படுத்திக்கொள்ளவேண்டும்.
உலகின் பல முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள தயாராக இருக்கிறார்கள். அதற்கேற்ற கட்டமைப்பு வசதிகளையும், சலுகைகளையும், தொழில் அமைதியையும் தமிழ்நாட்டில் பார்க்க முடிந்தால்தான் அவர்கள் தமிழ்நாட்டில் கால் தடம் பதிப்பார்கள். எப்படி தொழில் அமைதியை அந்த நிறுவனங்கள் எதிர்பார்க்கிறதோ, அதுபோல அவர்கள் தொடங்கும் தொழிலுக்கு ஏற்றவகையிலான பணிகளை செய்வதற்குரிய படிப்புகளை படித்த இளைஞர்களும் வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். இப்போது காலத்துக்கு ஏற்றவகையில் எப்படி வேலைவாய்ப்புகள் உருவாகிறதோ அதற்குரிய படிப்புகளும் வந்துவிட்டது. எடுத்துக்காட்டாக, 'ரோபோடிக்ஸ்', செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) போன்ற துறைகளில் நிறைய வேலைவாய்ப்புகள் இருக்கின்றன.
செயற்கை நுண்ணறிவுக்குத்தான் எதிர்காலம் என்றவகையில், அதை மையமாக வைத்து பல வேலைவாய்ப்புகள் உருவாகிக்கொண்டு இருக்கிறது. எனவே தமிழக அரசின் கல்வித்திட்டத்திலும், பல்கலைக்கழகங்களிலும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பாடத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும். உலகின் பெரும் பணக்கார நிறுவனமான மைக்ரோசாப்ட் தொழில்நுட்பத்துறையில் பெரும் புரட்சியை செய்து வருகிறது. இது இந்தியாவில் பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை அளித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் சத்திய நாதெள்ளா பணியாற்றி பெருமை சேர்த்து வருகிறார்.
அவர் பெங்களூருவில் அனைவரையும் கவரும் வகையில் நல்ல அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, "அடுத்த 2 ஆண்டுகளில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகளை 'கிளவுட்' மற்றும் செயற்கை நுண்ணறிவு கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்காக செலவிடப்போகிறது" என்றும், "அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு செயற்கை நுண்ணறிவு திறன்களில் பயிற்சி அளிக்கப்படும்" என்றும் அறிவித்திருக்கிறார். மைக்ரோசாப்ட் நிறுவனம் சொல்வதைவிட அதிகமாகவே செய்யும். கடந்த ஆண்டு இந்த நிறுவனம் 2025-ம் ஆண்டுக்குள் 20 லட்சம் பேருக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவித்து இருந்த இலக்கை தாண்டிவிட்டது.
இப்போது ஒரு கோடி பேர்தான் இலக்கு. தமிழ்நாட்டுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும். எப்படி மரத்தில் பழுத்து தொங்கும் பழங்களை யார் குதித்து அதிக பழங்களை பறிக்கிறார்களோ, அவர்களது கூடைதான் நிரம்பும் என்பதுபோல தமிழக தொழில்துறையும், தகவல் தொழில்நுட்பத்துறையும் உடனடியாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தோடு தொடர்புகொண்டு இந்த 'கிளவுட்' மற்றும் செயற்கை நுண்ணறிவு கட்டமைப்புகளை அதிக அளவில் தமிழ்நாட்டில் தொடங்கவும், அவர்களின் இலக்கான ஒரு கோடி பேருக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி என்பதில் கணிசமான அளவினை தமிழ்நாட்டுக்கு வழங்கவும் கோரிக்கை விடுத்து, அந்த முயற்சியில் வெற்றியும் பெறவேண்டும்.