
தமிழ்நாட்டில் உள்ள சாலைகள், தெருக்கள் என ஒரு இடம் கூட பாக்கி இல்லாமல் கொடிகள் பறந்துக்கொண்டிருக்கின்றன. வெறும் கட்சி கொடிகள் மட்டுமல்ல பல்வேறு இயக்கங்கள், மதங்களுக்கான கொடிகள், சாதிகளுக்கான கொடிகள் என்று எல்லாவற்றுக்குமே கொடிகள் இருக்கிறது. கொடிகள் இருந்தால்கூட பரவாயில்லை. ஒவ்வொரு கட்சி கொடிகளை புதிதாக பறக்கவிடும் முன்பு அதன் பக்கத்தில் இருக்கும் மற்ற கட்சி கொடிகளை விட அதிக உயரத்தில் இருக்கவேண்டும் என்று போட்டா போட்டி நிலவுகிறது. இந்த கொடிகளையெல்லாம் அவரவர் சொந்த இடங்களில் கம்பு நட்டு பறக்கவிட்டால் பரவாயில்லை. ஆனால் பொது இடங்களில் குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலைகளில் உள்ள நடைபாதைகளில்தான் நடுகிறார்கள். அதுவும் கம்பத்தை தரையில் மட்டும் நடுவதில்லை. அதை சுற்றிலும் ஒரு திண்டு கட்டி, அதில் கல்வெட்டையும் வைத்து, யார் தலைமையில்? யார் முன்னிலையில்? யார் அந்த கொடியை ஏற்றி வைத்தார்கள்? என்றும் பெரிய எழுத்துகளால் பொறித்து விடுகிறார்கள்.
கட்சிகளுக்கு சமமாக சாதி, மத மற்றும் பல்வேறு இயக்கங்களின் கொடிகளும் வரிசையாக நடப்படுவதால் மக்களால் நடைபாதையில் நடக்க முடியாமல், ரோட்டில் இறங்கி செல்லவேண்டிய நிர்பந்தம் இருப்பதால் பல விபத்துகள் ஏற்படுகின்றன. கொடிக்கம்பங்களை நடும்போது அவர்களுக்குள்ளே சண்டை சச்சரவு ஏற்பட்டு சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படுகிறது. இதுபோன்று பொது இடங்களில் கொடி வைப்பது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்குகளில் நீதிபதி இளந்திரையன் மிக துணிச்சலான ஒரு தீர்ப்பை வழங்கினார். அதில், தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சாதி, மத ரீதியிலான அனைத்து கொடி கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்றவேண்டும் என்று கடந்த 27-1-2025 அன்று உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது. மின்னல் வேகத்தில் இதை விசாரித்த பெண் நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி ஆகியோர் கொண்ட அமர்வும் இந்த தீர்ப்பை கடந்த 6-ந்தேதி உறுதி செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எந்த கட்சி முதலில் நடைமுறைப்படுத்தப்போகிறது என்று அனைத்து மக்களும் எதிர்பார்த்துக்கொண்டு இருந்த வேளையில், தி.மு.க. முந்திக்கொண்டது. தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "தி.மு.க.வின் அனைத்து அமைப்புகள் மற்றும் கட்சி தொண்டர்கள் தங்கள் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களிலும், பொது இடங்களிலும் வைத்துள்ள நமது கட்சி கொடிக்கம்பங்களை மதுரை ஐகோர்ட்டு கிளை அளித்த தீர்ப்பினையேற்று தாங்களே முன்வந்து 15 நாட்களுக்குள் அகற்றி, அந்த விவரத்தை தலைமை கழகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.
ஒரு பெரிய புரட்சிகரமான மாற்றத்துக்கு தி.மு.க. முன்மாதிரியாகிவிட்டது. மற்ற கட்சிகள், சாதி, மத மற்றும் இயக்கங்களும் இதை உடனடியாக பின்பற்றி சாலைகளிலும், பொது இடங்களிலும் உள்ள தங்கள் கொடிக்கம்பங்களை அகற்றி மக்களின் நன்மதிப்பை பெறவேண்டும். இல்லையென்றால் ஐகோர்ட்டு தீர்ப்புப்படி அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் அனைத்து கொடிக்கம்பங்களையும் அகற்றிவிட்டு, அதற்கான செலவை அந்த கொடிக்கம்பங்களை அமைத்தவர்களிடம் இருந்து வசூலித்துக்கொள்ள வேண்டும்.