ஆசிய விளையாட்டு - பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடம்

ஆசிய விளையாட்டு ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.;

Update:2023-10-04 06:34 IST

ஆசிய விளையாட்டு தொடரில் 18 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 81 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

Live Updates
2023-10-04 12:53 GMT

ஆண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் இந்திய நால்வர் அணி 3:01.58 நிமிடங்களில் இலக்கை அடைந்து புதிய சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றுள்ளது. இதன் மூலம் ஆசிய விளையாட்டு தொடரில் 18 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 81 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

2023-10-04 12:41 GMT

ஆசிய போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். அதிகபட்சமாக 88.88 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் கிஷோர் குமார் ஜேனா (87.54 மீட்டர் தூரம்) 2-ம் இடம் பிடித்து வெள்ளி வென்றார். ஈட்டி எறிதலில் இந்திய வீரர்கள் நீரஜ் சோப்ரா, கிஷோர் குமார் முறையே தங்கம், வெள்ளி வென்று அசத்தி உள்ளது.  



2023-10-04 12:27 GMT

4x400 மீட்டர் பெண்கள் தொடர் ஓட்டத்தில் வித்யா ராம்ராஜ், ஐஸ்வர்யா மிஸ்ரா, பிராச்சி, சுபா வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

2023-10-04 12:15 GMT

5,000 மீ ஓட்டப்பந்தயத்தில் அவினாஷ் சேபிள் வெள்ளி வென்றார். 4-வது இடம் பிடித்த இந்தியாவின் மற்றொரு வீரர் குல்வீர் சிங் நூலிழையில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டார்.

2023-10-04 11:45 GMT

பெண்களுக்கான 800 மீ ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஹர்மிலன் பெயின்ஸ் வெள்ளிப்பதக்கம் வென்றார். முன்னதாக 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் இவர் வெள்ளிப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. ஹர்மிலன் பெயின்ஸ்சின் தாயார் 2002 ஆசிய விளையாட்டு போட்டியில் 800 மீட்டர்  ஓட்டப்பந்தயத்தில்  வெள்ளி வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2023-10-04 11:31 GMT

ஆண்கள் கிரேக்க-ரோமன் மல்யுத்த போட்டி:

ஆண்கள் கிரேக்க-ரோமன் மல்யுத்தம் 87 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் சுனில் குமார் வெண்கலப் பதக்கம் வென்றார். அவர் கிர்கிஸ்தானின் அட்டபெக் அசிஸ்பெகோவை 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்தார். ஆசிய விளையாட்டு மல்யுத்தத்தில் கிரேக்க-ரோமன் பிரிவில் 2010க்கு பின் இந்தியா பதக்கம் வென்றுள்ளது.

2023-10-04 10:55 GMT

ஸ்குவாஷ்:

ஆண்களுக்கான ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் சவுரவ் கோசல் இறுதி போட்டிக்கு முன்னேறினார். அரையிறுதியில் இவர் ஹென்ரி லெயுங்-ஐ 3-0 என்ற அடிப்படையில் வீழ்த்தினார்.

2023-10-04 10:06 GMT

ஸ்குவாஷ்:

ஆண்களுக்கான ஸ்குவாஷ் அரையிறுதி போட்டியில், இந்திய வீரர் சவுரவ் கோசல், ஹாங்காங்கின் லுயெங் சி ஹின்ரியை எதிர்கொள்ள இருக்கிறார்.

2023-10-04 09:48 GMT

ஆக்கி:

ஆண்களுக்கான ஆக்கி அரையிறுதி போட்டியில் இந்தியா - தென்கொரியா மோதின. இதில் போட்டி தொடங்கியது முதலே இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. இந்தியா 5-3 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

2023-10-04 09:27 GMT

கபடி:

ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான கபடி குரூப் ஏ பிரிவில் தாய்லாந்தை 54-22 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா வீழ்த்தியது. அரையிறுதியில் நேபாளத்தை எதிர்கொள்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்