டி20 உலகக்கோப்பை தொடரில் நடந்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த விராட் கோலி

டி20 உலகக்கோப்பை தொடரில் தொடக்க வீரராக சொதப்பியபோது, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா இருவரிடமும் சென்று, மீண்டும் நம்பர் 3 பேட்டிங் வரிசையில் விளையாடவா? என்று கேட்டதாக விராட் கோலி கூறியுள்ளார்.

Update: 2024-07-01 05:45 GMT

பார்படாஸ்,

20 அணிகள் இடையிலான 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் நடைபெற்றது. வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா இணைந்து நடத்திய இந்த கிரிக்கெட் திருவிழாவில் பிரிஜ்டவுனில் அரங்கேறிய மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் மோதின.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 76 ரன்கள் குவித்தார்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 169 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன்மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா 2-வது முறையாக கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது. ஆட்ட நாயகன் விருது பெற்ற விராட்  கோலி, இந்த போட்டியுடன் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

முன்னதாக நடப்பு தொடரில் முதல் முறையாக தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்ட விராட் கோலி, அரையிறுதி வரை சொதப்பினார். ஆனால் இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடி, தான் யார் என்பதை இந்த உலகுக்கு நிரூபித்தார்.

இந்நிலையில் இந்த தொடரில் தொடக்க வீரராக சொதப்பியபோது, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா இருவரிடமும் சென்று, மீண்டும் நம்பர் 3 பேட்டிங் வரிசையில் விளையாடவா? என்று கேட்டதாக சுவாரஸ்யமான தகவலை விராட் கோலி பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்த டி20 உலகக்கோப்பை தொடரின் போது தொடக்க வீரராக களமிறங்கி என்னால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இந்திய அணிக்கு பங்களிக்க முடியாதபோது கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரிடமும் நேரடியாக சென்று நான் நம்பர் 3 வரிசையில் களமிறங்கவா என்று கேட்டேன். ஆனால் அவர்கள் என் மீது நம்பிக்கை வைத்தனர்.

இன்றைய ஆட்டத்தின்போது நாங்கள் தோலியடைந்துவிட்டோம் என்று நினைத்தேன். ஆனால் பவுலர்கள் மொத்தமாக ஆட்டத்தை மாற்றி அற்புதத்தை நிகழ்த்திவிட்டார்கள். இதுதான் என்னுடைய கடைசி டி20 போட்டி. இதனை விடவும் சிறந்த முடிவு எனக்கு கிடைக்காது என்று நினைக்கிறேன்" என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்