போட்டி எந்த நிலையில் இருந்தாலும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது - எய்டன் மார்க்ரம்

போட்டி எந்த நிலையில் இருந்தாலும் வெல்ல முடியும் என்கின்ற நம்பிக்கை வந்திருக்கிறது என எய்டன் மார்க்ரம் கூறியுள்ளார்.

Update: 2024-06-29 05:48 GMT

image courtesy: AFP

பார்படாஸ்,

9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 1-ந்தேதி தொடங்கியது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 20 அணிகள் பங்கேற்றன. லீக் மற்றும் சூப்பர் 8 சுற்று முடிவில் இந்தியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதியை எட்டின.

அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், இந்திய அணி 68 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தையும் விரட்டியடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் பார்படோஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்நிலையில் இந்த ஆட்டம் குறித்து தென் ஆப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் அளித்த பேட்டியில் கூறியதாவது, நீங்கள் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் இப்பொழுது ஒரு படி மேலே சென்று இருக்கிறீர்கள். நாங்கள் ஒரு அணியாக சிறப்பாக விளையாடி வருகிறோம். நடக்க இருப்பது ஒரு புதிய போட்டி. இந்தியா ஒரு சிறந்த அணி.

நாங்கள் கடந்த இரண்டு வருடங்களாக சிறப்பான முறையில் பயிற்சி செய்து வருகிறோம். இந்தியா போன்ற நல்ல அணிக்கு எதிராக இது எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. ஒரு கேப்டனாக நான்தான் தென் ஆப்பிரிக்கா அணியை இந்த இடத்திற்கு கொண்டு வந்ததாக நான் பார்க்கவில்லை. இது ஒரு குழு முயற்சி.

சில ஆண்டுகளாக இந்த அணி சிறப்பாக செயல்பட்டதன் மூலம் தற்போது இறுதிப் போட்டிக்கு வந்திருக்கிறது. முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு வந்திருப்பது எனக்கு மட்டுமில்லாமல் மொத்த அணிக்கும் பெருமையானது. போட்டி எந்த நிலையில் இருந்தாலும் வெல்ல முடியும் என்கின்ற நம்பிக்கை வந்திருக்கிறது. இதுதான் எங்களுக்கு முக்கியமானது என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்