டெஸ்ட் கிரிக்கெட்: வினோத் காம்ப்ளியின் மாபெரும் சாதனையை தகர்த்து பிராட்மேனை சமன் செய்த கமிந்து மென்டிஸ்

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் கமிந்து மென்டிஸ் 182 ரன்கள் குவித்தார்.

Update: 2024-09-27 14:48 GMT

காலே,

இலங்கை - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் 'டாஸ்' ஜெயித்த இலங்கை கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

அதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் நாள் 5 விக்கெட்டுகளை இழந்து 602 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கமிந்து மென்டிஸ் 182 ரன்களும், குசல் மென்டிஸ் 106 ரன்களும் அடித்தனர். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 2-வது நாள் முடிவில் 22 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. வில்லியம்சன் 6 ரன்களுடனும், அஜாஸ் படேல் ரன் எதுவுமின்றியும் களத்தில் உள்ளனர். நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் 182 ரன்கள் குவித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்களை கடந்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்த ஆசிய வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் இந்தியாவின் வினோத் காம்ப்ளி 14 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்ததே சாதனையாக இருந்தது. தற்போது 13 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்துள்ள கமிந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

மேலும் டெஸ்ட் வரலாற்றில் குறைந்த இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்த வீரர்களின் சாதனை பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த டான் பிராட்மேனை சமன் செய்துள்ளார். இருவரும் 13 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை செய்துள்ளனர். இந்த பட்டியலில் முதலிடத்தில் ஹெர்பர்ட் சட்க்ளிப் மற்றும் எவர்டன் வீக்ஸ் இருவரும் 12 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்ததே சாதனையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்