ஐ.பி.எல்.2025: முதல் போட்டியிலேயே எழுந்த சர்ச்சை.. சுனில் நரைனுக்கு ஏன் அவுட் கொடுக்கவில்லை..? விவரம்
நடப்பு ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் சுனில் நரைனுக்கு ஹிட் விக்கெட் கொடுக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.;

கொல்கத்தா,
18-வது ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவில் நேற்று இரவு நடந்த தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்தித்தது. இதில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரஹானே 56 ரன்கள் அடித்தார். பெங்களூரு அணி தரப்பில் குருணல் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இதனையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி 16.2 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுக்கு 177 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக விராட் கோலி 59 ரன்களும், பில் சால்ட் 56 ரன்களும் அடித்தனர். பெங்களூரு சுழற்பந்து வீச்சாளர் குருனால் பாண்ட்யா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
முன்னதாக இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தபோது 8-வது ஓவரை பெங்களூரு வீரர் ரசிக் சலாம் வீசினார். அந்த ஓவரின் 4-வது பந்து பேட்ஸ்மேனின் தோள்பட்டைக்கு மேலே சென்றதால் வைடு வழங்கப்பட்டது. இருப்பினும் அது வைடு இல்லை என்பதுபோல் பெங்களூரு வீரர்கள் ரியாக்ஷன் கொடுத்தனர்.
இதனிடையே அந்த பந்தை எதிர்கொண்ட சுனில் நரைனின் பேட் ஸ்டம்ப் மீது பட்டதில் பெயில்ஸ் கீழே விழுந்துள்ளது. இதனை முதலில் பெங்களூரு அணியினர் கவனிக்காமல் போனாலும், சில வினாடிகள் கழித்து விக்கெட்டுக்கு அப்பீல் செய்தனர். அதனை ரீப்ளேயில் சோதனை செய்த நடுவர்கள் நாட் அவுட் தெரிவித்தனர்.
அதற்கான காரணம் என்னெவெனில், சுனில் நரைனின் பேட் ஸ்டம்பில் படுவதற்கு முன்பே நடுவர் வைடு வழங்கிவிட்டார். அத்துடன் பந்து விக்கெட் கீப்பரின் கைக்கு சென்ற பிறகே சுனில் நரைனின் பேட் ஸ்டம்பில் பட்டுள்ளது. இதன் காரணமாக விதிமுறையின் படி இது அவுட் கிடையாது என்பதால் நடுவர் சுனில் நரைனுக்கு அவுட் வழங்கவில்லை.
இருப்பினும் ரசிகர்கள் இதனை அவுட்தான் என்று விமர்சித்து வருகின்றனர். இது சர்ச்சையை கிளப்பியுள்ளது.