ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு-கர்நாடகா அணிகள் இன்று மோதல்

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் இடையிலான லீக் ஆட்டம் சென்னையில் இன்று தொடங்குகிறது.

Update: 2024-02-08 21:45 GMT

கோப்புப்படம் 

 சென்னை,

89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன.

'சி' பிரிவில் அங்கம் வகிக்கும் தமிழக அணி தனது 6-வது லீக் ஆட்டத்தில் கர்நாடகாவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிகிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

சாய் கிஷோர் தலைமையிலான தமிழக அணி முதலாவது ஆட்டத்தில் குஜராத்திடம் தோல்வியை தழுவியது. அடுத்த ஆட்டத்தில் திரிபுராவுடன் 'டிரா' கண்டது. அதன் பிறகு ரெயில்வே, சண்டிகர், கோவா ஆகிய அணிகளை அடுத்தடுத்து தோற்கடித்து தனது பிரிவில் 21 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. தமிழக அணியில் பேட்டிங்கில் ஜெகதீசன் (5 ஆட்டத்தில் முச்சதம் உள்பட 679 ரன்), பிரதோஷ் ரஞ்சன் பால் (315 ரன்), பாபா இந்திரஜித்தும் (273 ரன்), பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர்களான கேப்டன் சாய் கிஷோர் (27 விக்கெட்), அஜித் ராம் (18 விக்கெட்), வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியர் (17 விக்கெட்) ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

மயங்க் அகர்வால்

கர்நாடக அணி 5 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிராவுடன் 21 புள்ளிகள் பெற்று ரன்-ரேட்டில் பின்தங்கியதால் 2-வது இடத்தில் உள்ளது.

திரிபுராவுக்கு எதிரான ஆட்டத்தை முடித்து கொண்டு சூரத்தில் நடைபெறும் அடுத்த போட்டிக்காக அகர்தலாவில் இருந்து விமானத்தில் புறப்பட்ட கர்நாடக அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் தனது இருக்கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்தார். குடித்ததும் அது தண்ணீர் இல்லை, ஆசிட் என்பதை உணர்ந்த அவர் உடனடியாக துப்பினார். தொண்டை எரிச்சல் மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட அவர் பேசமுடியாமல் திணறினார். இதனால் உடனடியாக விமானம் தரைஇறக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மயங்க் அகர்வால் ரெயில்வேக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் ஆடவில்லை.

தற்போது முழு உடல் தகுதியை எட்டி இருக்கும் மயங்க் அகர்வால் அணிக்கு திரும்பி இருக்கிறார். அத்துடன் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய 'ஏ' அணிக்காக ஆடிய இடக்கை பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல்லும் கர்நாடகா அணியுடன் இணைந்துள்ளார். இது அந்த அணியின் பேட்டிங்குக்கு வலுசேர்க்கும். பந்து வீச்சில் வாசுகி கவுசிக், ரோகித் குமார், விஜய்குமார் வைசாக் ஆகியோர் அசத்துகிறார்கள். தனது பிரிவில் முதலிடத்தில் நீடிக்க தமிழக அணியும், வெற்றி பெற்று முதலிடத்துக்கு முன்னேற கர்நாடகமும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இதில் வெற்றி பெறும் அணி கால்இறுதியை உறுதி செய்யும்.

ரசிகர்களுக்கு இலவச அனுமதி

இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்படும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. சி, டி, இ, ஆகிய ஸ்டாண்டுகளின் கீழ்தளத்தில் அமர்ந்து போட்டியை பார்க்கலாம் என்றும், விக்டோரியா ஹாஸ்டல் ரோட்டில் உள்ள 4-வது நுழைவு வாயில் வழியாக ரசிகர்கள் ஸ்டேடியத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்