மலிங்கா என கூறி ஷகிப் அல் ஹசனை கலாய்த்த கோலி... மலிங்கா கொடுத்த ரியாக்ஷன் வைரல்

ஷகிப் அல் ஹசனை மலிங்கா என கூறி விராட் கோலி கலாய்த்தார்.;

Update:2024-09-21 21:11 IST

சென்னை,

இந்தியா - வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டம் கடந்த 19ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 376 ரன்கள் குவித்தது.

இந்தியா தரப்பில் அஸ்வின் 113 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 149 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 227 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் எடுத்திருந்தது. இதன் மூலம் நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 308 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில் 3வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா தரப்பில் தொடர்ந்து பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் இருவரும் அதிரடியாக ஆடி சதம் அடித்து அசத்தினர். இறுதியில் இந்தியா 64 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 287 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தியா தரப்பில் சுப்மன் கில் 119 ரன் (நாட் அவுட்), ரிஷப் பண்ட் 109 ரன் எடுத்தனர்.

இதையடுத்து 515 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்த வங்காளதேசம் 3-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் அடித்துள்ளது.

முன்னதாக இப்போட்டியின் 2வது நாளில் வீரர் விராட் கோலி பேட்டிங் செய்தார். அவருக்கு எதிராக வங்காளதேச வீரர் ஷகிப் அல் ஹசன் ஒரு ஓவரை வீசினார். அந்த ஓவரில் பெரும்பாலும் அவர் விராட் கோலியின் கால்களை குறி பார்த்து யார்க்கர் போல வீசினர். அதனால் ஆச்சரியமடைந்த விராட் கோலி ஸ்பின்னரான இவர் என்ன இப்படி யார்க்கர்களாக போடுகிறார் என்ற வகையில் ரியாக்ஷன் கொடுத்தார்.

அத்துடன் அடுத்த ஓவரின் இடைவெளியில் அருகில் பீல்டிங் செய்து கொண்டிருந்த ஷகிப் அல் ஹசனை பார்த்து "நியாமை மல்லி (நைஸ் பிரதர்). நீங்கள் என்ன மலிங்காவா? இப்படி யார்க்கர் மேல் யார்க்கர் மேல் போடுகிறீர்கள்" என்று சிங்கள மற்றும் இந்தி மொழியில் கலந்து சொல்லி விராட் கோலி கலாய்த்தார். அதை கேட்டு ஷகிப் அல் ஹசன் மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே சிரித்தனர்.

அந்த வீடியோ சமூக வலைதலங்களில் வைரலானது. தற்போது அந்த வீடியோவை பார்த்த லசித் மலிங்கா "நியாமை மல்லி" என்று டுவிட்டரில் சிரித்து பதிலளித்துள்ளார். அதாவது நியாமை மல்லி என்றால் சிங்களத்தில் "நல்லது சகோதரா" என்ற அர்த்தமாகும்.

இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்