மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: அயர்லாந்து வெற்றி பெற இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா
இந்தியா - அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.;
ராஜ்கோட்,
அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இந்த ஆட்டங்கள் ராஜ்கோட்டில் நடக்கிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்தியா தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன மந்தனா 73 ரன்களும், பிரதிகா ராவல் 67 ரன்களும் அடித்து அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.
அதனை அப்படியே பின்பற்றிய ஹர்லீன் தியோல் - ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடியாக விளையாடி அணியின் ரன் எண்ணிக்கையை வேகமாக உயர்த்தினர். இவர்களின் அதிரடியால் இந்திய அணி 350 ரன்களை கடந்தது. ஹர்லீன் தியோல் 89 ரன்களிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 102 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 370 ரன்கள் குவித்துள்ளது. அயர்லாந்து தரப்பில் ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் மற்றும் ஆர்லீன் கெல்லி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 371 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி அயர்லாந்து அணி களமிறங்க உள்ளது.