அந்த வெற்றிதான் ரசிகர்களின் கண்ணை மறைத்துவிட்டது - விராட், ரோகித்துக்கு ஜான்டி ரோட்ஸ் ஆதரவு
ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெறுவது மிகவும் கடினம் என்று ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.;
கேப்டவுன்,
ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணி, 10 ஆண்டுக்கு பிறகு 'பார்டர் - கவாஸ்கர்' கோப்பையை பறிகொடுத்தது. அத்துடன் முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்தது.
இந்த தொடரில் சீனியர் வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரது செயல்பாடு மெச்சும்படி இல்லை. டெஸ்டில் ரோகித் சர்மா கடைசி 15 இன்னிங்சில் 164 ரன் மட்டுமே எடுத்து சொதப்பியுள்ளார். விராட் கோலி பெர்த் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் அடித்த சதத்தை தவிர்த்து பார்த்தால் கடைசி 14 இன்னிங்சில் 183 ரன்களே எடுத்திருக்கிறார். அதனால் அவர்களை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று இந்திய ரசிகர்களே விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெறுவது எந்த வெளிநாட்டு அணிக்கும் சிம்ம சொப்பனமென்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் கூறியுள்ளார். இருப்பினும் கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற 2 தொடர்களில் இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்றது. அந்த வெற்றிகள் இந்திய ரசிகர்களின் கண்ணை மறைத்ததால் விராட், ரோகித் ஆகிய இருவரை மட்டும் விமர்சிப்பதாக ஜான்டி ரோட்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ஒவ்வொருவரும் தங்களின் கருத்தை தெரிவிக்கும் உரிமையை கொண்டுள்ளார்கள். கிரிக்கெட் என்பது அந்த மாதிரியான விளையாட்டு. அதில் இப்போதுள்ள வீரர்கள் பொதுமக்களிடம் இருந்து தப்பிக்க முடியாது. குறிப்பாக ரசிகர்கள் கொண்டாடுவதாக இருந்தாலும் சரி அல்லது சமூக வலைதளங்களில் விமர்சனங்களை கொடுப்பதாக இருந்தாலும் சரி அல்லது ஊடகங்களில் விமர்சனங்கள் எழுவதாக இருந்தாலும் சரி அவற்றிலிருந்து தப்பிக்க முடியாது.
இப்போதெல்லாம் ஒவ்வொரு வல்லுனர்களும் தங்களிடமிருந்து வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். உண்மையில் ஆஸ்திரேலியா பயணம் செல்வதற்கு மிகவும் கடினமான இடம். அதை கடந்த 2 தொடர்களில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றதால் இந்திய ரசிகர்கள் மறந்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். உண்மையில் ஆஸ்திரேலியாவில் வெல்வது மிகவும் கடினம். அங்கே வெல்வதற்கான அற்புதமான செயல்பாடுகள் கடந்த 2 தொடர்களில் வெளிப்பட்டது. ஆனால் இம்முறை அது போன்ற செயல்பாடுகள் வெளிப்படவில்லை. எனவே அதற்காக இரண்டு பேரை மட்டும் விமர்சிப்பது சரியானது அல்ல என்று நினைக்கிறேன்" என கூறினார்.