மகளிர் ஆஷஸ் தொடர்; முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக அலிசா ஹீலி 70 ரன்கள் எடுத்தார்.;
சிட்னி,
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் போலவே, மகளிர் அணிகளுக்கு இடையேயும் ஆஷஸ் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான மகளிர் ஆஷஸ் தொடர் இன்று தொடங்கியது. இந்த தொடர் இம்முறை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.
அதன்படி இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களிலும், ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதல் ஒருநாள் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 204 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஹெதர் நை 39 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஆஷ்லே கார்ட்னர் 3 விக்கெட்டும், கிம் கார்த், அன்னபெல் சதர்லேண்ட், அலனா கிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 205 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த ஆஸ்திரேலிய அணி 38.5 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 206 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக அலிசா ஹீலி 70 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.