துலீப் கோப்பை: ஸ்ரேயாஸ், ரிக்கி புய் அரைசதம்.. இந்தியா டி அணி 311 ரன்கள் முன்னிலை

துலீப் கோப்பை தொடரின் 3-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

Update: 2024-09-21 15:08 GMT

image courtesy: AFP

அனந்தபூர்,

துலீப் கோப்பை கிரிக்கெட்டில் 3-வது ரவுண்ட் ஆட்டங்கள் ஆந்திர மாநிலம் அனந்தபூரில் நடைபெற்று வருகின்றன. இதில் ஸ்ரேயாஸ் தலைமையிலான இந்தியா 'டி' அணி, அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா 'பி' அணியை எதிர்கொண்டது.

இதில் முதலில் பேட் செய்த இந்தியா டி அணி முதல் இன்னிங்சில் 349 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 101 பந்துகளில் 106 ரன்கள் குவித்தார். இந்தியா பி தரப்பில் நவ்தீப் சைனி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா பி அணி 282 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அபிமன்யூ ஈஸ்வரன் 116 ரன்கள் அடிக்க, இந்தியாடி தரப்பில் சவுரப் குமார் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 67 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா டி அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. படிக்கல் 3 ரன்களிலும் ஸ்ரீகர் பாரத் 2 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதன்பின் கை கோர்த்த ரிக்கி புய் - ஸ்ரேயாஸ் ஐயர் இணை அதிரடியாக விளையாடி ரன் குவித்தது.

ஐயர் 37 பந்துகளில் அரைசதமடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ரிக்கி புய் அரைசதம் அடித்தார். இதன் பின் களமிறங்கிய சஞ்சு சாம்சன் 45 ரன்களில் ஆட்டமிழந்தார்.

3-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்தியா டி 244 ரன்கள் அடித்துள்ளது. ரிக்கி புய் 54 ரன்களுடனும், ஆகாஷ் செங்குப்தா 23 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா டி இதுவரை 311 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

நாளை 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்