வங்காளதேச கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த முஷ்பிகுர் ரஹீம்
இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின்போது ரஹீம் இந்த சாதனையை படைத்துள்ளார்.
சென்னை,
இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 19-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா 376 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக அஸ்வின் 113 ரன்கள் குவித்தார். வங்காளதேசம் தரப்பில் ஹசன் மக்மூத் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 149 ரன்களில் சுருண்டது. இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 227 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 287 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இந்தியா தரப்பில் சுப்மன் கில் 119 ரன் (நாட் அவுட்), ரிஷப் பண்ட் 109 ரன் எடுத்தனர்.
இதையடுத்து 515 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்காளதேசம் தற்போது வரை 4 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் அடித்துள்ளது.
அந்த அணியின் முன்னணி வீரரான முஷ்பிகுர் ரஹீம் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இருப்பினும் ரஹீம் சர்வதேச கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அதன் விவரம் பின்வருமாறு:-
இந்த இன்னிங்சில் ரஹீம் 6 ரன்கள் அடித்திருந்தபோது சர்வதேச கிரிக்கெட்டில் வங்காளதேச அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்தார். அவர் இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 15,201 ரன்கள் குவித்துள்ளார்.
இதற்கு முன்னர் அந்த அணிக்காக தமிம் இக்பால் 15192 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அவரை முந்தியுள்ள ரஹீம் புதிய சாதனையை படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:-
1. முஷ்பிகுர் ரஹீம் - 15,201 ரன்கள்
2.தமிம் இக்பால் - 15,192 ரன்கள்
3. ஷகிப் அல் ஹசன் - 14,696 ரன்கள்
4.மக்மதுல்லா - 10,694 ரன்கள்